முகப்பு News India தனது மரணத்தை குறித்து முன்கூட்டியே கூறிய கருணாநிதி

தனது மரணத்தை குறித்து முன்கூட்டியே கூறிய கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி தமது நீண்ட நெடிய அரசியல் பயணத்தின் இடையே பலமுறை தமது மரணம் தொடர்பில் கோடிட்டுக்காட்டியுள்ளார்.

1983-ம் ஆண்டு கருணாநிதி தனது அறுபதாவது பிறந்த நாளுக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில்,

நாற்பத்து ஐந்தாவது வயதில் தமிழக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளானேன்.

இதோ இன்னும் 15 நாள்களில் ஜூன் 3 ம் திகதி 60-ம் அகவையில் அடியெடுத்து வைக்கிறேன். இனி நான் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் என்னைப் பொறுத்தவரையில் கல்லறையை நோக்கித்தான் என்றாலும் நான் ஒவ்வோர் அங்குலம் நகரும்போதும் இந்தச் சமுதாயம் குன்றின் மேலிட்ட விளக்காக ஒளிவிடுவதற்கான உழைப்பையே வழங்குவதற்கு உறுதிபூண்டிருக்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

அதே கருணாநிதிதான் இன்று 95 வயதிலும் இயற்கையை எதிர்த்து காவேரி மருத்துவமனையில் மனஉறுதியோடு போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்.

கருணாநிதியின் உடல்நிலை கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நலிவடைந்த நிலையில் இருந்தபோது, ஒருபோதும் அவர் மனரீதியாக நலிவடைந்ததில்லை.

ஓய்வே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தவருக்கு இந்த ஒன்றரை ஆண்டு தொடர் ஓய்வினால் துவண்டு போயிருப்பார் என்று கருதியவர்கள்கூட இப்போதும் மனவலிமையோடு போராடிக்கொண்டிருக்கும் கருணாநிதி என்ற ஆளுமையைப் பார்த்து வியக்காமல் இல்லை.

ஒரு கட்டத்தில் தனது ஆயுள் பற்றி எழுதிய கருணாநிதி, “நான் குறிப்பிட்டுள்ளபடி இனியிருப்பது நீடித்த பயணமோ, குறுகிய காலப் பயணமோ… எனக்குத் தெரியாது. நடை தள்ளாடலாம்… தடைபடலாம்… முடிவுற்றுப்போய் விடலாம். ஆனால், நான் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றுக்கொண்ட உணர்வுக்கு முடிவே இல்லை” என்று அழுத்தமாகச் சொல்லியுள்ளார்.

அந்த உணர்வும், போராட்ட குணமும்தான் கருணாநிதி என்னும் ஆளுமையை மருத்துவ அறிவியலுக்கே சவால்விடும் மனோ தைரியத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய கருணாநிதி,

“நானும், அன்பழகனும், 90 வயதைக் கடந்துவிட்டோம். 100 வயது வரை வாழ விரும்பினால், அது உங்களையும் எங்களையும் ஏமாற்றுவதாக இருக்கும்.

எனினும், நானும், அன்பழகனும் இன்னும், 10, 15 ஆண்டுகள் வாழ்வோம். அதுவரை, தி.மு.க-வை இளைஞர்கள், மாணவர்கள், தொண்டர்கள் கட்டிக் காக்க வேண்டும்” என்று சொல்ல கலைஞர் அரங்கமே அதிர வாழ்த்துகளை ஓசையாக எழுப்பினார்கள்.

அந்த நெஞ்சுறுதியும், வாழவேண்டும் என்கிற வேட்கையுமே இன்றும் கருணாநிதியை மருத்துவத்துக்கே சவால்விடும் வகையில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com