தனது தாயை இழந்து நிற்கும் பிள்ளைகளின் கண்ணீரை பார்த்த ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலைசெய்யவேண்டும்

அரசியல் கைதி

தனது தாயை இழந்து நிற்கும் பிள்ளைகளின் கண்ணீரை பார்த்த ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலைசெய்யவேண்டும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வேண்டுகோள் முன்வைத்துள்ளார்;.

தமிழ் மக்களும் இணைந்தே தன்னை ஜனாதிபதியாக்கியதாகவும் தான் ஜனாதிபதிதேர்தலில் வெற்றிபெறாவிட்டால் தனது நிலை என்னாகியிருக்குமோ என்றும் தமிழ் பேசும் மக்கள் எனது உயிரைக்காப்பாற்றியுள்ளார்கள் என்று கூட ஜனாதிபத கூறியிருந்தார். அந்த நிலைமையினை உணர்ந்துகொண்டு இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்பாக தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலைசெய்யப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ளுராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழவு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் செவ்வாய்கிழமை (20) நடைபெற்றது இங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்;.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது அபிவிருத்திக்கு அப்பால் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வினைப்பெற்றுக்கொள்வதற்காக இன்றுவரையில் போராடிக்கொண்டுள்ளது.

2001ஆம் ஆண்டு தமிழர்களின் ஒருமித்த குரலாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பானது 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழர்களின் ஒரே குரலாக இன்று ஜெனீவா வரையில் ஒலித்துவருகின்றது.

2015ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஒரு கொடூர ஆட்சியை மாற்றி நல்லாட்சி என்ற ஒன்றை கொண்டுவந்தோம்.கடந்த மூன்று வருடத்தில் தமிழ் மக்கள் நினைத்து எதுவும் அந்த ஆட்சியில் நடக்கவில்லை.

யாழ் சென்ற ஜனாதிபதி நன்றி மறப்பவன் நான் இல்லையென கூறியுள்ளார்.ஆனால் அவரின் இந்த மூன்று வருட ஆட்சிக்காலத்தில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையினையும் அவர் எடுக்கவில்லை.

சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் ஆனந்த சுதாகரன் என்ற அரசியல் கைதியின் இல்லத்தில் நடந்த சம்பவம் அனைத்து தமிழர்களையும் இரத்தக்கண்ணீர் வடிக்கவைத்தது.

விமல்வீரவன்ச பெரும் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டபோது அவரது மகள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றார் என்ற காரணத்திற்காக அவர் விடுதலைசெய்யப்படும்போது ஒரு தாயினை இழந்த இரண்டு குழந்தைகளின் கண்ணீரைப்பார்த்த அந்த ஜனாதிபதி அவர்கள் அந்த ஆனந்த சுதாகரனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும்.அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்வதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும்.

அனைத்து தமிழ் மக்களும் இணைந்தே தன்னை ஜனாதிபதியாக்கியதாகவும் தான் ஜனாதிபதிதேர்தலில் வெற்றிபெறாவிட்டால் தனது நிலை என்னாகியிருக்குமோ என்றும் தமிழ் பேசும் மக்கள் எனது உயிரைக்காப்பாற்றியுள்ளார்கள் என்று கூட ஜனாதிபத கூறியிருந்தார்.

அந்த நிலைமையினை உணர்ந்துகொண்டு இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்பாக தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலைசெய்யப்படவேண்டும்.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்று கிடைக்கும் வரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக இருந்து பாடுபடவேண்டும்;.ஒருமித்த குரலாக ஒலிக்கவேண்டும் என்பதுடன் அதன் கரம் பலப்படுத்தப்படவேண்டும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]