தந்தையை கொலை செய்ய குற்றச்சாட்டில் மகனுக்கு மரண தண்டனை

ஏழு வருடங்களாக பதுளை மேல் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்ட கொலை வழக்கு இன்றைய தினம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதுடன் சந்தேக நபரான, கொலை செய்யப்பட்டவரின் மகன் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கொலைச் சந்தேக நபர், பிணையில் விடப்பட்டிருந்த போதிலும், அவர் குறிப்பிட்ட தினங்களில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், நீதிமன்றத்தை புறக்கணித்து வந்துள்ளார். அவர் நீதிமன்றில் ஆஜராகியிருக்காமலேயே, கொலை வழக்கு விசாரணை செய்யப்பட்டது. வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் அந் நபர் குற்றவாளியாகக் காணப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பதுளை மேல்நீதிமன்ற நீதிபதி ரொகான் ஜயவர்தன, அந் நபருக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பு வழங்கினார்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் திகதி அட்டாம்பிட்டி பெருந்தோட்டத்தின் கீழ்ப்பிரிவினைச் சேர்ந்த கே. செல்லையா என்ற நபர் தடியினால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருந்தார்.

இக்கொலையினையடுத்து, அவரது மகனான செல்லையா ரவீந்திரன் சந்தேகத்தில் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, அவருக்கெதிராக பதுளை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், விசேட மனுவொன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அம் மனுவின் அடிப்படையில், நீதிபதியினால் அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் அந்நபர் நீதிமன்றம் குறிப்பிட்ட தினங்களில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நீதிமன்றத்தை புறக்கணித்து வந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, அந் நபரின்றியே, அவரைக் குற்றவாளியாகக் கண்ட நீதிபதி, அந் நபரை உடன் கைது செய்து, நீதிமன்ற தண்டனையை அனுபவிக்க நடவடிக்கைகளை எடுக்கும்படி, பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]