ததேகூ மூன்று உள்ளுராட்சி சபைகளில் மாத்திரம் தனித்து ஆட்சியமைக்க முடியும்

ததேகூ

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மூன்று உள்ளுராட்சி சபைகளைத் தவிர ஏனைய எந்தவொரு சபையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை உருவாகியுள்ள என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்மைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள் பதவிப் பிரமாணம் செய்வதிலே பிரச்சினை. பதவிப் பிரமாணத்தின் பின் அவர்களின் பதவியைத் தக்க வைப்பது கேள்விக் குறியாக இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ளுராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழவு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் செவ்வாய்கிழமை (20) நடைபெற்றது இங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்;.

அவர் தொடரந்து உரையறாற்றுகையில் – “அறுபது ஆண்டு கால அரசியல் நிலைமைக்கும், 2015க்குப் பின்னர் உள்ள அரசியல் நிலைமைக்கும் உள்ள வித்தியாசத்தை நாங்கள் உளப்பூர்வமாக உணர்ந்து கொண்டு அறிவுபூர்வமாக நடக்க வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்திலே இருக்கின்றோம்.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒரு விதத்தில் அனைவரையும் உழுப்பி வைத்திருக்கின்றது. இந்த உள்ளுராட்சித் தேர்தல் பல்வேறு குழப்பங்களை இந்த முழு நாட்டிலும் ஏற்படுத்தியிருக்கின்றது. யாரும் நினைத்த அளவுக்கு வெற்றிபெற்றோம், நினைத்த அளிவிற்கு சபையை அமைத்துக் கொள்வோம் என்று சொல்ல முடியாத நிலைமையிலேயான ஒரு சிக்கல் இப்போது ஏற்பட்டிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொருத்தவரையில் ஒரு சரிவு ஏற்பட்டிருக்கின்றதா என்கின்ற கேள்வி நம் முன்னாள் வைக்கப்பட்டிருக்கின்றது. இதன் உண்மை நிலையை நாங்கள் அறிய வேண்டும். அதற்கு மக்களைச் சந்தித்து அவர்கள் மூலம் இதனை அறிய வேண்டும்.

இதன் நிமித்தம் மாவட்ட ரீதியில் மக்களைச் சந்தித்து கருத்தறியக் கூடிய செயற்பாடுகளைத் தொடர்ச்சியாகச் செய்தோம். இதன் மூலம் அறிக்கை தயாரிக்கப்பட்டு அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டமைப்பில் மற்றும் அதன் செயற்பாட்டில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் கருதியிருக்கின்றோம். மக்கள் அதனைத்தான் எஎதிர்பார்க்கிறார்கள்.

நாங்கள் அரசியலையும் விடுதலையையும் ஒன்றாகச் செய்ய வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். தனித்து விடுதலை என்கின்ற விடயத்தை மேற்கொள்ளும் போது எங்களுக்கு இவ்வாறான சிக்கல்கள் ஏற்படாது. ஆனால் நாங்கள் விடுதலை நோக்கிய பாதையில் செல்லுகின்ற அதே நேரத்திலே அரசியலையும் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் இதற்கு ஏற்ற விதத்திலே எங்களுடைய அமைப்பை மாற்றிக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

கட்சி மிகவும் பலமுடையதாக இருக்க வேண்டும், கட்சியிலே இருப்பவர்கள் முழுக்க முழுக்க கட்சிக்காக உழைப்பவர்களாக இருக்க வேண்டும், மக்களால் தெரிவு செய்யப்பட்டு பதவிகளைப் பெறுபவர்கள் முழுமையாக மக்களுக்குச் சேவையைச் செய்யக் கூடிய விதத்திலே அவர்களுக்கு சில விடுவிப்புகள் இருக்க வேண்டும். அதற்கான மக்களின் ஆலோசனைகளை நாங்கள் பெற்றிருக்கின்றோம்.

எங்களை விட்டுச் சென்றவர்கள் வெள்வேறு கூடுகளில் சென்றிருக்கின்றார்கள் அவர்களின் நிலை என்னவென்று அனைவருக்கும் தெரியும். எங்களை விட்டுச் சென்றவர்கள் பதவிப் பிரமாணம் செய்வதிலே பிரச்சினை. பதவிப் பிரமாணத்தின் பின் அவர்களின் பதவியைத் தக்க வைப்பது கேள்விக் குறியாக இருக்கின்றது.

இதிலிருந்து ஒரு பாடத்தை எம்மிடம் இருந்து பிரிந்து சென்ற அன்பர்களும், நாங்களும் கற்றுக் கொள்ள வேண்டும். எமது தலைமையைப் போல வேறு எந்தத் தலைமையும் உறுப்பினர்களை அனுசரித்துக் கொண்டு செல்லாது என்பதை அவர்கள் தற்போது புரிந்திருப்பார்கள். எமது கட்சியை எவ்வாறெல்லாம் விமர்சனம் செய்தார்கள். ஆனால் எமது கட்சி அவர்களைத் தூக்கி எறியவுமில்லை, தூற்றவுமில்லை.

எனவே எமது தலைமை எவ்வளவு சிறந்தது, உறுதியானது, எந்தவகையிலே மக்களுக்கு வழிகாட்டுகின்றது என்கின்ற விடயத்தை அவர்கள் அறிந்து கொள்வது போல நாங்களும் அறிந்து கொள்ள வேண்டும்.

முன்பெல்லாம் விருப்பு வாக்குகளின் அடிப்படையிலே உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். அவ்வாறு வருகின்ற போது அந்த உறுப்பினர்கள் பெற்ற வாக்குகள் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்தது. எனவே கட்சி நடவடிக்கைகள் எடுக்கும் போது நீதிமன்றம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இனிமேல் அவ்வாறு இருக்காது, மக்கள் அளித்த வாக்குகள் எல்லாம் கட்சிக்கு அளித்த வாக்குகள். கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எற்ற விதத்திலே நடந்து கொள்ள முடியாத உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்ற போது நீதிமன்றம் கட்சியின் பக்கத்திலே நின்றுதான் தீர்ப்பு வழங்குமே அல்லாமல் விருப்பு வாக்குகள் பெற்ற முன்னைய உறுப்பினர்களை நோக்குவது போன்று நோக்காது என்கின்ற விடயத்தை உறுப்பினர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

நாங்கள் எடுக்கின்ற முடிவுகள் தவறாக இருப்பின் அப்போதுதான் உங்களுக்கு எங்களோடு அதிக வேலைகள் இருக்க வேண்டும். எங்களோடு நின்று நாங்கள் விட்ட தவறுகளை அடையாளமிட்டு அவ்வாறு ஒரு பிழை நடக்காத விதத்திலே எங்களோடு சேர்ந்து செயற்பட வேண்டும்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]