தண்ணீர்த் தொழிற்சாலைக்கெதிரான போராட்டம் கொழும்பை நோக்கி நகரும்

தண்ணீர்த் தொழிற்சாலைக்கெதிரான போராட்டம் கொழும்பை நோக்கி நகரும்

தண்ணீர்த் தொழிற்சாலையை மூடுவது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கமோ, ஜனாதிபதியோ, பிரதமரே, சம்மந்தப்பட்டவர்களோ மேற்கொள்ளாவிட்டால் இரண்டொரு வாரங்களில் எமது போராட்டம் கொழும்பை நோக்கி நகரும் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – புல்லுமலையில் அமைக்கப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையைத் தடைசெய்யுமாறு வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இதுவரை எவ்விதமான சாதகமான பதிலும் கிடைக்கவில்லை இவ்விடம் தொடர்பாக ஊடகங்களை தெழிவுபடுத்து ஊடக சந்திப்பு செங்கலடி நகரில் நடைபெற்றது இங்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்

புல்லுமலையிலே அமைந்து கொண்டிருக்கின்ற தண்ணீர்த் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இம்மாதம் 07ம் திகதி மட்டக்களப்பில் ஹர்த்தால் போராட்டமொன்று இடம்பெற்றது. அனைத்து மக்களும் மிகவும் உணர்வு பூர்வமாக இந்த ஹர்த்தாலை அனுஸ்டித்தார்கள். அதே நேரத்தில் முஸ்லீம் சகோதர வியாபாரிகளும் கூட இதற்கு ஆதரவாக இருந்தார்கள்.

இதன் மூலம் இந்த தண்ணீர்த் தொழிற்சாலையை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் நகர்புறங்களைத் தாண்டி கிராமங்களில் சிறிய வியாபார கடைகள் கூட மூடப்பட்டிருந்தன இது பலரையும் ஆச்சரியப்படுத்திய விடயம். கூலித் தொழிலாளிகள், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இதற்கான ஆதரவை வழங்கியிருக்கின்றார்கள்.

எனவே இந்த தண்ணீர்த் தொழிற்சாலையுடன் சம்மந்தப்பட்டவர்கள், ஜனாதிபதி, பிரதமர் உட்பட அனைவரும் எமது மக்களின் இந்த வெளிப்பாட்டினை ஏற்று இதனை அமைக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என நாங்கள் திரும்பவும் வலியுறுத்துகின்றோம்.

இந்த ஹர்த்தாலின் பின்னர் நாங்கள் ஜனாதிபதி பிரதமருக்கு பதிவுத் தபால் மூலம் இதன் பாதிப்புகள் பற்றிய ஒரு கடித வரைபினை அனுப்பியிருக்கின்றோம். ஆனால் இதவரை எவ்வித சமிக்ஞைகளும் காட்டப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.

அமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் காத்தான்குடி நகரசபைத் தலைவர் ஆகியோருக்கு இவ்விடத்தில் ஒரு முக்கிய பதிவினை விட விரும்புகின்றோம். இந்தத் தண்ணீர்த் தொழிற்சாலையானது தனிநபர் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டது. அரசியலில் இருக்கும் நீங்கள் பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் ஆகையால் தனிநபரின் இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தண்ணீர்த் தொழிற்சாலையை மூடுவதற்கு ஆவன செய்ய வேண்டும் என உங்களை நேரடியாக வலியுறுத்துகின்றோம்.

இந்த சமூகத்தின்பால் நாங்கள் அக்கறை கொண்டவர்கள். இந்த சமூகத்திலே மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். சகல இனங்களும் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். இந்தத் தண்ணீர்த் தொழிற்சாலையினால் பாரிய பின்விளைவுகள், பின்னடைவுகள் வரக்கூடாது. தனிநபர் லாபத்திற்காக ஊரைப் பாழாக்குகின்ற திட்டத்திற்கு மக்கள் ஒருபோதும் விடமாட்டார்கள்.

நாங்கள் பல்வேறு சாத்வீக வழிகளில் இந்த தண்ணீர்த் தொழிற்சாலைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். இது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இதனை மூடுவதற்கான செயற்பாடுகளை அரசாங்கமோ, ஜனாதிபதியோ, பிரதமரே, சம்மந்தப்பட்டவர்களோ மேற்கொள்ளாவிட்டால் இரண்டொரு வாரங்களில் எமது போராட்டம் கொழும்பை நோக்கி நகரும். கொழும்பிலே இதற்கெதிரான பாரிய ஆர்ப்பாட்டத்தினை அங்கிருக்கின்ற சிங்கள மக்களையும், பௌத்த அமைப்புகளையும் ஒன்று திரட்டி நடாத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]