தடுப்புக் காவலிலுள்ள தமிழ் கைதிகளுக்கும் பிணை வழங்க வேண்டும் – ஜனாதிபதிக்கு மனோ கோரிக்கை

தடுப்புக் காவலிலுள்ள தமிழ் கைதிகளுக்கும் பிணை அல்லது புனர்வாழ்வு அல்லது விடுதலை ஆகிய தெரிவுகளில் ஏதாவது ஒன்றை பெற்று தரும்படி தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

பொது எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு பிணை வழங்கல், சட்ட மாஅதிபர் தரப்பு ஆட்சேபனை தெரிவிக்காததையடுத்து சாத்தியமாகியது. இந்நிலையில், பல வருடங்களாக நீண்ட கால தடுப்பில் இருக்கின்ற தமிழ் கைதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, கடந்த காலங்களை விட , இன்று தமிழ் மக்களால் அதிகமாக உணரப்படுகிறது. தமிழ் மக்கள் மட்டுமல்ல, பல்வேறு ஆளும் தரப்பு, எதிர் தரப்பு அரசியல் கட்சிகளும் இந்நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன.

இது தமிழ்சிங்கள புத்தாண்டு காலம். அடுத்த மாதம் சர்வதேச விசாக பண்டிகையை, ஐ.நா. சபையின் ஆதரவுடன் நமது அரசாங்கம் இலங்கையில் முதன் முறையாக கொண்டாடவுள்ளது. இவற்றை கணக்கில் கொண்டு, நீண்டகால தமிழ் தடுப்புக்காவல் கைதிகளை பிணை அல்லது புனர்வாழ்வு அல்லது விடுதலை ஆகிய தெரிவு அடிப்படைகளில் விடுவிக்க ஆவன செய்ய வேண்டுகிறேன் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்து மூல கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறியதாவது,

இவ்விடயத்தில் தொடர்ந்து விளையாட முடியாது. இவர்களுக்கு ஒரு சட்டம். அவர்களுக்கு ஒரு சட்டம் என்று இரண்டு வித சட்டங்கள், கவனிப்புகள் இந்நாட்டில் இருக்க முடியாது. இப்படி இருந்தால், நான் எப்படியப்பா, தேசிய சகவாழ்வு அமைச்சர் என்ற முறையில் இனங்களுக்கு மத்தியில் சகவாழ்வை உருவாக்குவது?

தமிழ் கைதிகள் மீதான குற்றச்சாட்டும், விமல் வீரவன்ச எம்பி மீதான குற்றச்சாட்டுகளும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், இந்த கைதிகள் மிக நீண்டகாலமாக சிறைகளில் இருக்கிறார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால், கைதிகளுக்கு நிவாரணம் வழங்காமல் இருக்க, இந்த சட்ட அடிப்படைகளை கண்டுபிடித்து சொல்ல இங்கே பலர் காத்திருக்கின்றர்கள்.

இந்த கைதிகளில் பலரது வாழ்வின் பெரும்பாகம் சிறைகளில் முடிந்தே விட்டது. சட்ட அடிப்படைகளை விட இந்த மனிதாபிமான அடிப்படைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று ஜனாதிபதியிடம் இது தொடர்பில் எழுத்து மூலமாக அறிவிக்கிறேன். அதேபோல் அடுத்தவார அமைச்சரவை கூட்டத்திலும் இதுபற்றி பேசவுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]