தடியால் தாக்கப்பட்டு ஒருவர் பலி; இருவர் கைது

நுவரெலியா, அக்கரப்பத்தனை பகுதியில் தடியால் தாக்கப்பட்டு ஒருவர் பலியாகியுள்ள சம்பவமொன்று, நேற்று வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி தோட்டத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய ராமையா பெரியசாமி என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான குறித்த நபர், கடுங்காயங்களுடன் அக்கரப்பத்தனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளாரென, அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அக்கரப்பத்தனை, ஊட்டுவள்ளி தோட்டம், உட்லெக் பிரிவில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு, கைகலப்பாக மாறியதில் சந்தேக நபர்களான இருவர், குறித்த நபரைத் தடியால் தாக்கியுள்ளனரென, பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த சம்பவத்தை கண்ட உயிரிழந்தவரின் மகன் ஒருவர், தனது அப்பாவை அடித்ததாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான உயிரிழந்த நபரின் உறவினர்கள் இருவரைக் கைது செய்த அக்கரப்பத்தனை பொலிஸார், அவர்களை, நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

சடலம், அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை, அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]