டெஸ்ட் போட்டியில் வேகமாக 6000 ரன்களை கடந்த விராட் கோலி

டெஸ்ட் போட்டியில் வேகமாக 6000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனை இந்திய அணியின் தலைவர் விராட் கோலி படைத்துள்ளார்.

இந்த சாதனையானது, இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியினால் சாத்தியமாகியுள்ளது.

சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில், நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்ற நிலையில், விராட் கோலி 9 ரன்களை பெற்றுக்கொண்ட போது டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களை கடந்தார். இதையடுத்து, டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 6000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

தனது 70வது டெஸ்டில் விளையாடி வரும் விராட் கோலி தனது 119வது இன்னிங்ஸில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். அந்த வகையில் முதலிடத்தில் சுனில் கவாஸ்கர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிக குறைந்த இன்னிங்சில் 5000 ரன்னிலிருந்து 6000 ரன்களை விராட் கோலி கடந்துள்ளார். முன்பு 1000 ரன்களை கடந்ததை விட தற்போது வெறும் 14 இன்னிங்சில் கடைசி 1000 ரன்களை கடந்து இந்த சாதனையை இவர் படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகின்றது.

டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]