டெனீஸ்வரனை தூக்கி எறிந்தார் விக்கி

வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தூக்கி எறிந்துள்ளார்.

அவரது அமைச்சுப் பதவியில் சிலவற்றை திருமதி அனந்தி சசிதரனுக்கும், எஞ்சியவற்றை தானே பொறுப்பெடுப்பதாவும் தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேக்கு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.

அமைச்சர் பா.டெனீஸ்வரன் தானே அமைச்சுப் பதவியில் தொடர்வதாக ஏற்கனவே, வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளமையால், இந்த விடயத்தில் சட்டஆலோசனை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் கூரே சட்டமா அதிபர் திணைக்களத்தை நாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் இடைஞ்சலாக இருந்து வந்தார். அவரது கட்சியான ரெலோ, 6 மாத காலத்துக்கு அவரைக் கட்சியிலிருந்து இடைநிறுத்தும் முடிவை எடுத்திருந்தது.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அதனடிப்படையில், டெனீஸ்வரனை தனது அமைச்சரவையிலிருந்து தூக்கி எறிந்திருந்தார்.

டெனீஸ்வரன் வகித்த அமைச்சுப் பதவியில் வர்த்தக வாணிபத்தை, தற்போது மகளிர் விவகார அமைச்சராகவுள்ள திருமதி அனந்தி சசிதரனுக்கும், எஞ்சிய பொறுப்புக்களை தானும் பொறுப்பேற்பதாகத் தெரிவித்து முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்றுக் காலை கடிதம் அனுப்பியுள்ளார்.

முதலமைச்சர் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக அந்த அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை நீக்குவதில் சட்டரீதியாக சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

வடக்கு மாகாண ஆளுநர் கூரேக்கு, சில தினங்களுக்கு முன்னர் பா.டெனீஸ்வரன் கடிதம் அனுப்பியிருந்தார். அதில், தான் இப்போதும் அமைச்சராகத் தொடர்கின்றேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சர் ஒருவர் சுயமாகப் பதவி விலகாத நிலையிலும், மாகாண சபையில் அந்த அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவர் வெளியேற்றப்படாத நிலையிலும், முதலமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சரை மாற்றலாமா? என்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வடக்கு மாகாண ஆளுநர் கூரே ஆலோசனை கேட்டுள்ளார்.

இதேவேளை, அமைச்சர் ப.சத்தியலிங்கம் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக முதலமைச்சருக்கு கொடுத்த கடிதம் வடக்கு மாகாண ஆளுநருக்கு இன்னமும் கொடுக்கப்படவில்லை.

இதனால் சுகாதார அமைச்சுப் பதவியை குணசீலன் ஏற்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. பதவி விலகல் கடிதம் கொடுக்கப்பட்டு அதனை ஆளுநர் ஏற்றுக் கொண்டாலேயே, குணசீலன் அமைச்சராகப் பதவியேற்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் அமைச்சரவை மாற்றம் இன்னமும் சிக்கலுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]