டெங்கு ஒழிப்பு மற்றும் கழிவகற்றல் நடவடிக்கைகளில் அனைவரும் கைகோர்க்கவேண்டும் : ஜனாதிபதி

கழிவகற்றல் மற்றும் டெங்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரசியல்வாதிகளும், அரச அலுவலர்களும் மக்களுடன் கைகோர்க்க வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மகரகம இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர்கூடத்தில் நேற்று நடைபெற்ற கொழும்பு மாவட்ட விசேட சுற்றாடல் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

கழிவகற்றல் தொடர்பில் இடம்பெறும் எதிர்ப்புகளின்போது மக்கள் பிரதிநிதிகள் புரிந்துணர்வின்றியும், பொறுப்பற்றும் செயற்படுவதனால் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, கழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் அனைவரும் தமக்காகவும், நாட்டுக்காகவும் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென்று தெரிவித்தார்.

கழிவு முகாமைத்துவத்தில் மீள்சுழற்சியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தும் தேசிய திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவிருப்பதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

கழிவகற்றலில் இராணுவத்தினர் ஈடுபடமாட்டார்களென இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்ததாக வெளிவரும் செய்திகளை நினைவு படுத்திய ஜனாதிபதி, ஊடகப் பேச்சாளர் அவ்வாறு தெரிவிக்கவில்லை எனவும், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் தான் அவ்வாறு கழிவகற்றலில் ஈடுபடுமாறு உத்தரவிடவில்லை எனவும் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் செயற்படும் நிறுவனங்கள் உரியவாறு பொறுப்புக்களை நிறைவேற்றுகின்றனவா என மேற்பார்வை செய்யும் பொறுப்பு மட்டுமே இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஒழிப்புக்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டு, அது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் தகவலாளர்களாக செயற்படுமாறு அனைத்து அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களையும் அதிபர்களையும் கோரிய ஜனாதிபதி, மேற்குறித்த விடயங்களுக்கென தனியான அலகுகள் நிறுவப்படாத அனைத்து நிறுவனங்களிலும் உடனடியாக அந்த அலகுகளை நிறுவி அவற்றின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யுமாறு நிறுவன தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஆலோசனை குறிப்புகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகளை விட மனிதாபிமானத்துடனும், மனச்சாட்சியுடனும் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

மாவட்ட மட்டத்தில் ஏற்பாடு செய்யப்படும் முதலாவது சுற்றாடல் மாநாடு ‘டெங்கு ஒழிப்பு மற்றும் கழிவகற்றல்’ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டாவது மாநாடு கம்பஹா மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

டெங்கு நோயை தவிர்த்தல் மற்றும் கட்டுப்படுத்தலுக்கான துரித செயற்திட்டம் தொடர்பில் மருத்துவ நிபுணர் ஹசித்த திசேரா விசேட உரை ஆற்றினார். மொரட்டுவ பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி மகேஸ் ஜயவீர கழிவு முகாமைத்துவம் தொடர்பில் விசேட உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் மதகுருமார்கள், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, மேல் மாகாண ஆளுனர் கே.பி.லோகேஸ்வரன், மாகாண அமைச்சர் காமினி திலகசிறி ஆகியோரும் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன் உள்ளிட்ட அரச அலுவலர்களும் முப்படைத் தளபதிகள், பொலீஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]l.com