டெங்குவை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கை

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து துரித நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று சபையில் அறிவித்தார்.

டெங்கு நோய் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை எழுந்த சர்ச்சையை அடுத்து நாடாளுமன்றம் 20 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு 2.15 மணியளவில் கூடியது. இதற்கிடையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய சுகாதார அமைச்சர் எதிர்க்கட்சிகளின் கேள்விக் கனைகளுக்கு பதில் அளிக்க சபைக்கு வரவுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதற்கமைய சுகாதார அமைச்சரின் பதிலைப் பெற்றுக்கொள்ளும் பொறுட்டு மீண்டும் சபை 2.40 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டு 3.10 மணியளவில் கூடியது. இதனைத் தொடர்ந்து உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அதாவது, இதற்கு முன்னர் டெங்கு நோய் தொடர்பில் அவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நான் தாமதிக்காமல் பதில் வழங்கியுள்ளேன். எனினும், தினேஸ் குணவர்த்தன எம்.பி., இன்றைய தினம் (நேற்று) இவ்வாறானக் கேள்வியொன்றை கேட்பார் என்று எனக்கு முன் அறிவிப்பு விடுக்கப்படவில்லை. 2 மணியளவில் (நேற்று) தான் டெங்கு தொடர்பில் சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது என்பதும் இதற்கு பிரதமர் நாளை (இன்று) பதிலளிப்பார் என்றும் எனக்கு தெரியவந்தது.

நாமும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் வருகிறோம். நோயாளர்களின் நெருக்கடியை குறைப்பதற்காக கட்டில் வசதிகள், வைத்திய வசதிகள் என்பவற்றையும் நாம் தற்போது அதிகரித்துள்ளோம்.
மேலும், இதற்காக வைத்தியர்களுக்கு விசேட கருத்தரங்குகளும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அத்தோடு, மதஸ்தலங்கள், பாடசாலைகள் மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் டெங்கு நோய் குறித்து விழிப்புணர்வு வேலைத்திட்டங்களையும் நாம் நடைமுறைப்படுத்திதான் வருகிறோம்.
உண்மையில் 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது டெங்கு நோய் பரவும் வீகிதம் இவ்வாண்டில் குறைவு என்றே கூறவேண்டும். அவ்வாண்டில் 349 பேர் என நூற்றுக்கு ஒருவர் விகிதம் இறந்தார்கள். தற்போது, நூற்றுக்கு பூச்சியம் புள்ளி மூன்று வீதமான இறப்பே இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும், இவற்றை கட்டுப்படுத்துவது அரசின் பாரிய பொறுப்பாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]