டி20 யிலும் இலங்கை தோல்வி: மூவகை தொடரும் இந்தியாவசம்

டி20 யிலும் இலங்கை தோல்வி: மூவகை தொடரும் இந்தியாவசம் டி20
இலங்கை அணிக்கு எதிரான ஒற்றை 20க்கு 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்றிரவு இடம்பெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக சற்றுத் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இந்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்;கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் டில்ஷான் முனவீர 29 பந்துகளில் 53 ஓட்டங்களை ஆகக் கூடுதலாக பெற்றார்.

இவருக்கு அடுத்தபடியாக ப்ரியன்ஜன் 40 ஓட்டங்களையும், இசுறு உதய 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் சஹால்  3 விக்கட்டுக்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கட்டுக்களையும், பிரவீன் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இதையடுத்து, 171 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில், அணித் தலைவர் விராட் கோலி 54 பந்துகளில்  82 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு காரணமாய் அமைந்தார்.

அவருக்கு அடுத்தபடியாக மனிஸ் பான்டே ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில்  51 ஓட்டங்களையும், லோகேஷ் ராஹுல் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில், லசித் மலிங்க, சீக்குகே பிரசன்ன மற்றும் இசுறு உதான ஆகியோர் தலா ஒரு விக்கட்டுகக்களை  வீழ்த்தியிருந்தனர்.

ஆட்டநாயகனாக இந்திய அணித் தலைவர்  விராட்கோலி தெரிவானார்.