டிசம்பர் 7இற்குள் கலப்பு முறையில் உள்ளூராட்சி தேர்தல் : கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு : மஹிந்த அணி புறக்கணிப்பு

டிசம்பர் 7ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தலை  நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தலைமையில் நேற்றுமாலை அலரிமாளிகையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்திலேயே குறித்த தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்குஇணக்கம் காணப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிசபைத் தேர்தல் சட்டமூலம் குறித்தும் தேர்தலுடன் தொடர்புபட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சட்டமா அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும் கூட்டு எதிரணியின் சார்பில் எந்தவொரு உறுப்பினரும் பங்கேற்கவில்லை.

தேர்தலை இழுத்தடிக்கு முயற்சிக்கும் அரசின் செயலை கண்டிக்கும் வகையிலேயே தமது அணி சந்திப்பை புறக்கணித்ததாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.


டிசெம்பர் மாதம் 7 ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகுவதால் அதற்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஆணையாளர் இதன்போது கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன்படி நவம்பர் மாதம் வரவு – செலவுத் திட்டக் கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னரும், டிசெம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு இடையிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரியவருகின்றது.
60 சதவீதம் தொகுதிவாரியாகவும், 40 சதவீதம் விகிதாசார அடிப்படையிலும் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் கலப்புமுறையிலேயே தேர்தல் நடைபெறவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]