நல்லொழுக்க சந்ததிக்காய் அனைவரும் ஒன்றிணைவோம் – டக்ளஸ் தேவானந்தா

நல்லொழுக்க சந்ததிக்காய் அனைவரும் ஒன்றிணைவோம் – சித்தியெய்திய மாணவர்களுக்கான வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

டக்ளஸ் தேவானந்தா

“இளமையில் கல்வி சிலையில் எழுத்து” என்ற ஔவையாரின் கூற்றுக்கிணங்க தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அப் பரீட்சையில் சித்தி எய்திய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடந்துமுடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த அடைவு மட்டத்தை எட்டி வடக்கு கிழக்கு மாகாணங்களில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட அனைத்து மாணவச் செல்வங்களும் பாராட்டுக்குரியவர்களே.

அத்துடன் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளை எட்டாது இருக்கும் மாணவச் செல்வங்களையும் அவர்களது முயற்சிகளையும் நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

வடக்கு மாகாணசபை எமது மாணவச் செல்வங்களின் கல்வி மேம்பாடு தொடர்பான செயற்பாடுகளில் அக்கறையுடன் செயற்பட்டிருக்குமேயானால் மாணவர்களின் அடைவு மட்டங்கள் மேலும் அதிகரிக்கக்கூடியதான வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

ஆனால் அவர்களது செயற்றிறனற்ற அக்கறையற்ற திட்டமிடப்படாத நடவடிக்கைகளின் காரணமாகவே எமது மாணவச் செல்வங்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்க முடியாது போனதையிட்டும் நான் மனம்வருந்துகின்றேன்.

வெற்றியும் தோல்வியும் மனித வாழ்க்கையில் சமமாக மதிக்கப்படவேண்டும் என்பதை இச் சிறார்களின் மனங்களில் நன்கு உணர்த்தும் வகையில் பாடசாலைகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கரிசனையுடனும் அக்கறையுடனும் உழைக்கவேண்டும் என்பதுடன் எமது மாணவச் செல்வங்கள் எதிர்காலத்தில் கல்வி உள்ளிட்ட சகல துறைகளிலும் முன்னேற்றமடைந்து அந்ததந்தத் துறைகளில் மிளிரவேண்டும் என்பதே எனது பெருவிருப்பாகும் என்றும் டக்ளஸ் தேவானந்த தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.