கூட்டமைப்பினரின் திட்டமிடப்படாத தீர்மானங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுவருகின்றனர் – டக்ளஸ் தேவானந்தா

கூட்டமைப்பினரின் திட்டமிடப்படாத தீர்மானங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுவருகின்றனர் – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா

டக்ளஸ் தேவானந்தா

திட்டமிடப்படாத தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தீர்மானங்களால் எமது மக்களுக்கு ஒருபோதும் நன்மைகள் ஏற்படப்போவதில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற கட்சியின் மாவட்ட நிர்வாக உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உள்ளூராட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தேர்தலுக்கு முகங்கொடுக்க நாம் அனைவரும் தயாராக வேண்டும்.

மக்களுக்கு அரசியல் தொடர்பான ஜதார்த்த சூழலை தெளிவுபடுத்தி அதனூடாக ஒருமாற்றத்தை நோக்கி தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும்.

நாம் எப்போதுமே நடைமுறை சாத்தியமான விடயங்களையே எமது தேர்தல் விஞ்ஞாபனங்களூடாகவும் கட்சியின் நிலைப்பாடாகவும் கொண்டு அவற்றை முன்னெடுத்துவருகின்றோம்.

ஆனால் தமது சுயநலன்களுக்காக தேசியவாதம் பேசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஒருபுறம், தீவிரவாதம் பேசும் இன்னொரு கூட்டத்தாரும் என மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

டக்ளஸ் தேவானந்தா

இந்நிலையில் கடந்தகாலங்களில் எமது மக்களின் வாக்குகளை அபகரித்துக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நடைமுறைச் சாத்தியமாகாத சரியான முறையில் திட்டமிடப்படாத தீர்மானங்களை நிறைவேற்றி அதனூடாக எமது மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையை மக்களும் தற்போது நன்கு விளங்கிக்கொண்டு ஒரு மாற்றத்தை நோக்கி செயற்பட்டுவரும் நிலையில் மக்கள் விரும்பும் மாற்றத்தை நாம் கொடுக்கும் வகையில் எமது கட்சியின் கொள்கை நிலைப்பாட்டையும் வேலைத்திட்டங்களையும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன் உள்ளிட்ட பிரமுகர்கள் உடனிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]