ஞானசார தேரர் பிணையில் விடுதலை

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவருடைய மேன்முறையீட்டு மனு இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஞானசார தேரருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், அது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்ற வளாகில் வைத்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஞானசார தேரருக்கு கடந்த 14ஆம் திகதி 6 மாதங்களில் நிறைவடையக்கூடிய வகையில் 1 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஞானசார தேரர் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மேன்முறையீட்டு மனு கடந்த 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தால் குறித்த மனு இன்று வரை பிற்போடப்பட்டு இருந்தது.

மேலும், இன்றைய வழக்கு விசாரணையின் போது ஞானசார தேரர் நீதிமன்றுக்கு வருகைத்தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]