ஞானசார தேரரை கைதுசெய்வதில் அரசு தீவிரம் : ராஜித

ஞானசார தேரரை கைதுசெய்வதில் அரசு தீவிரங்காட்டி வருவதாகவும் பொலிஸாருக்கு அதற்கான பூரண அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நீதிமன்றத்தை அவமதித்தமை, பொலிஸாருக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் இனவாதக் கருத்துகளையும், மதவாத கருத்துகளை பரப்பி வருகின்றமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரரை கைதுசெய்ய எட்டு பொலிஸ் பிரிவுகள களத்தில் இறக்கப்பட்டும் அவர் ஏன் இன்னமும் வகைதுசெய்யப்படவில்லை என்று ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதலளித்த போது அவர் மேலும் கூறியதாவது,

ஞானசார தேர்தல் தொடர்பில் நேற்றைய (நேற்றுமுன்தினம்) அமைச்சரவை கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. சிலர் அமைச்சர்களும், அரசும் அவருக்கு பின்புலமாக இருப்பதாக கூறுகின்றனர். அவருக்கு ஆதரவளிப்பதாக கூறப்பட்ட அமைச்சர் சம்பிக்க ரணவக்ககே நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஞானசார தேரர் குறித்து கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

பொறுப்பற்ற கருத்துகளை கூற கூடாது. அரசுக்கு அவரை பாதுகாக்கும் தேவை என்ன உள்ளது?. ஞானசார தேரரை கைதசெய்வதற்கு பொலிஸாருக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பொலிஸார் அவரை கைதுசெய்வார்கள். முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணியாக இருந்து மனோகர சில்வாவே தற்போது ஞானசார தேரருக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கி வருகின்றார் என்ற கருத்தையும் அமைச்சர் சம்பிக்க நேற்றைய தினம் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவரிடம் விசாரணைகளை முடுக்கிவிட்டால் ஞானசார தேரர் இருக்கும் இடத்தை கூறுவார். கடந்த அரசின் காலத்தில் இந்த நாடு முகங்கொடுத்திருந்த இனவாதப் பிரச்சினைகளை மறந்துவிட்டு கருத்துகளை வெளியிட்டு வருகிற்னர். தற்போதைய அரசில்தான் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் குறைவடைந்துள்ளன. அண்மையகாலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளுக்கு பின்புலமாக எவர் உள்ளனர் என்பது குறித்து அரசு ஆராயந்து வருகின்றது.

அதற்கான நடவடிக்கைகளை எடுக்க பொலிஸாருக்கு பூரண அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. மதவாதம், இனவாதத்தை தோற்கடித்து ஆட்சிக்கு எம்மால் வரமுடியுமாக இருக்குமானால் ஏன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது? என்றும் அவர் கூறினார்.

ஞானாசார தேரரை பாதுகாப்பதில் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ பின்புலமாக உள்ளதான எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சரும், அமைச்சரவை இணைப்பேச்சாளருமான தயாசிறி ஜயசேகர,

அமைச்சர்களுக்கு ஞானசார தேரரை பாதுகாக்கும் தேவை கிடையாது. வெறுமனே அஸாத்சாலி அவ்வாறான கருத்துகளை கூற கூடாது. பொலிஸார் அவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் இடம்பெற்ற சம்பங்கள் தொடர்பிலும் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தொல்பொருள் திணைக்களத்தின் காணிகளை எடுக்கிறார்கள் என்று முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு தரப்பினரும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்று பொதுபல சேனாவுக்கு எதிராக ஒரு தரப்பினரும் தற்போது பரஸ்பரக் குற்றங்களைக் கூறிக்கொண்டுத் தான் வருகிறார்கள். உண்மையில் இவ்விரு தரப்பினராலும் நாட்டின் நல்லிணக்கமே பாதிக்கப்படுகின்றது. இதுவிடயத்தில் அரசும் பக்கச்சார்பின்றியே செயற்படும். இதற்காகத் தான் பொலிஸாரும் துரிதகதியில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். நாம் இதுவிடயத்தில் நடுநிலையாகவே செயற்படுவோம் என்றுத் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]