ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானம்??

சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுதந்திர தினத்தன்று (04.02.2019) ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படலாம்-

என்று சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரான துமிந்த திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவரும் ஞானசார தேரரை இன்று சந்தித்து சுக நலம் விசாரித்தார் துமிந்த திஸாநாயக்க எம்.பி.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

” சுதந்திரதினத்தன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் ஞானசார தேரரை விடுவித்துகொள்வதற்குரிய தேவைப்பாடு எமக்கிருக்கின்றது. இது தொடர்பில் ஜனாதிபதியுடனும், சம்பந்தப்பட்ட தரப்புகளுடனும் கோரிக்கை விடுக்கப்படும்.

எம்மால் விடுக்கப்படும் பொதுமன்னிப்பு கோரிக்கையை ஜனாதிபதி சாதகமாக பரீசிலிப்பார் என நம்புகின்றோம். ஞானசார தேரர் தவறிழைத்திருந்தால்கூட அதற்காக இதுவரை அனுபவித்த தண்டனை போதுமானது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.” என்றார்.

நீதிமன்றத்தை அவமதித்தார் என கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி தீர்ப்பளித்துள்ளது.

இதற்கமைய அவருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் வகையில் 19 வருட சிறைத்தண்டனை விதிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]