ஞானசார குழுவின் அடாவடிகளுக்கு எதிராக உடன் நடவடிக்கை தேவை : ஐக்கிய சமாதான முன்னணி

ஞானசார குழுவின் அடாவடிகளுக்கு எதிராக உடன் நடவடிக்கை தேவை என்று ஐக்கிய சமாதான முன்னணி வலியுறுத்தியுள்ளது.

 

பொலனறுவையிலுள்ள முஸ்லிம்களை மிரட்டும் வகையில் அடாவடிச் செயல்களில ஈடுபட்ட பொதுபலசேனா மற்றும் ராவண பலய அமைப்பினருக்கு எதிராக அரசு உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது ஐக்கிய சமாதான முன்னணி.

இதுவிடயத்தில் மௌனமாக இருக்காது முஸ்லிம் அரசியல்வாதிகளும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று குறித்த முன்னணியின் தலைவர் எம்.ஐ. மிப்லால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:-

“முஸ்லிம்களை இலக்குவைத்தும், அவர்களைச் சீண்டும் நோக்கிலுமே ஞானசார தேரர் தலைமையிலான இனவாதக்குழு அடாவடி – அட்டூழியச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

தொல்பொருள், வரலாற்றுப் பூமி என்ற போர்வையில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு அத்துமீறி நுழைத்து மிரட்டல்களை விடுத்து வருகின்றது. கடந்த ஞாயிறன்று பொலனறுவையில் அந்தக்குழு செயற்பட்ட விதமானது ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் சீற்றமடைய வைத்துள்ளது.

எங்களின் உயிரிலும் மேலான இறைவனையே இழிவுபடுத்தும் வகையில் அந்தக் குழுவினர் பேசியுள்ளனர். இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளானவை நாட்டிலுள்ள சட்டத்தை விரும்பியோ, விரும்பாமலே கையிலெடுக்கவேண்டிய கட்டாய நிலைக்கு முஸ்லிம்களைத் தள்ளிவிடும்.

அன்று தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும்போது அது தவறாக தென்பட்டன. ஆனால், நீதிக்காகவும், அடக்குமுறைகளுக்கு எதிராகவுமே அவர்கள் போராடினர் என்பது இன்று தெளிவாகின்றது. அப்படியானதொரு நிலைக்கு முஸ்லிம்களையும் இப்படிப்பட்ட குழுவினர் அழைத்துச் செல்கின்றனர். அதற்காகவே அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.

இனவாதத்துக்கு எதிராகவும், முஸ்லிம் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராகவும் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஞானசார தேரர் போன்ற இனவாதிகளை மடியில் வைத்து கொஞ்சிப் பாலூட்டியதாலேயே மஹிந்தவுக்கு வீட்டுக்கு செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்பதை இந்த அரசு புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே, அநியாயங்களைக் கண்டும் காணாதுபோல் நடித்து ஊமையாக இருக்காது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகளும் அரசைப் பாதுகாக்கும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு ஞானசார தேரருக்கு தண்டனையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” – என்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]