ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை பிள்ளையானுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் பிள்ளையானுக்கு விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேர் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜோசப் பரராஜசிங்கம்

எதிர்வரும் ஜுன் மாதம் 7 ஆம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வை.எம்.வை.இஸ்ஸடீன் உத்தரவை பிறப்பித்திருந்தார்.

2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொள்ளச் சென்றபோது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் சிவநேசதுரை சந்திரகாந்தன், 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் பிரதீப் மாஸ்டர், கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் உள்ளிட்டவர்களும் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]