ஜே.வி.பியினரிடம் இருந்து விழிப்பாயிருக்குமாறு ஆசிரியர்களை எச்சரிக்கிறது இலங்கை ஆசிரியர் சங்கம்

தமிழர் தாயகமாக ஒன்றிணைந்திருந்த கிழக்கு மாகாணத்தையும் வடக்கு மாகாணத்தையும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து பிரித்து வைத்த ஜே.வி.பி இனர் இப்பொழுது மீண்டும் வடக்கு கிழக்கில் முகாம் அமைத்து ஆள் திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளதோடு இலங்கை ஆசிரியர் சங்கத்தைப் பற்றியும் பொய்யான பரப்புரையைச் செய்து வருகின்றனர் என இலங்கை ஆசிரியர் சங்கம் சாடியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக திங்கட்கிழமை 02.07.2018 வெளியிடப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உத்தியோகபூர்வ “ஆசிரியர் குரல்” அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜே.வி.பி அதன் ஆதரவாளர்கள் 50 இற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கி, மட்டக்களப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் போன்ற தமிழ்ப் பிரதேசங்களில் காரியாலயங்களைத் திறந்து தமது அரசியல் நடவடிக்கைகளை முற்கொண்டு செல்லும் செயற்பாட்டில் ஈடுபடுத்துகின்றனர்.

இதற்குத் தேவையான நிதி ஆசிரியர்களின் சேமிப்பில் இருந்தே செலவு செய்யப்படுகின்றது.
அது மட்டுமல்லாது தமிழ்ப் பிரதேசங்களில் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் தமது ஆசிரியர் சேவைச் சங்கத்திற்கு புதிய ஆட்களைத் திரட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.

அவ்வேளையில், இலங்கை ஆசிரியர் சங்கமும் ஆசிரியர் சேவைச் சங்கமும் ஒன்று என பொய்யான பரப்புரையை ஆசிரியர்கள் மத்தியில் எடுத்துச் செல்கின்றனர்.
1987ஆம் ஆண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வாக இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன.
இந்த வடக்கு கிழக்கு இணைப்பின் மூலம் கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுவதாக ஜேவிபி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

அதை ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதிபதி சரத் என் சில்வாவைத் தலைவராகக் கொண்ட தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் ஊடாக 2007ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணம் நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டது.

தற்போது ஒன்றிணைந்த வடக்கு கிழக்கின் கீழ் தமிழ் மக்கள் தீர்வைப் பெற்றுக் கொள்வதில் இத்தீர்ப்பு பெருந் தடையாக உள்ளது.
இவ்வாறு தமிழ் மக்களின் தாயகத்தை சட்ட ரீதியாகப் பிரித்த ஜே.வி.பி. இன்று தமிழ் மக்களின் வாக்குகளுக்காகவும் தமிழ் ஆசிரியர்களின் உறுப்புரிமைக்காகவும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் முகாமிட்டுள்ளது.
இவர்களின் இந்த வஞ்சக செயற்பாட்டுக்கு தமிழ் ஆசிரியர்கள் சிலர் அறியாமையால் துணைபோவது பெரிதும் கவலை தரும் விடயமாக உள்ளது.

இவர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்த வரலாற்றுத் தவறை நன்கு உணர்ந்து இனி வரும் காலங்களிலாவது ஆசிரியர்கள் நன்கு சிந்தித்துச் செயல்பட வேண்டுமமென நாம் கேட்டுக் கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]