ஜெயலலிதா மரண விசாரணையில் திடீர் திருப்பம்!

ஜெயலலிதாவின் உடல்நிலை, 2016 மே மாதத்திலேயே மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது’ என, விசாரணை கமிஷனில், சர்க்கரை நோய் நிபுணர் ராமச்சந்திரன் கூறியது, விசாரணையில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை, 40க்கும் மேற்பட்டோரிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். நேற்று, சென்னை, அப்பல்லோ டாக்டர் ஜெயஸ்ரீ கோபால், சர்க்கரை நோய் நிபுணர் ராமச்சந்திரன் ஆகியோர், விசாரணைக்கு ஆஜராகினர்.

டாக்டர் ஜெயஸ்ரீ கோபால் வாக்குமூலம் அளித்த போது, முன்னுக்கு பின் முரணாக, சில தகவல்களை கூறியுள்ளார்.

பின், டாக்டர்கள் இருவரிடமும், நீதிபதி ஆறுமுகசாமி, கமிஷன் வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர், பல்வேறு கேள்விகள் கேட்டனர்; அதற்கு, அவர்கள் பதில் அளித்தனர்.

அப்போது, ஜெயலலிதாவுக்கு, 2016 டிச., 4 மாலை, மாரடைப்பு ஏற்பட்ட பின், அவரின் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டதாகவும், மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்னரும், அவருக்கு சிகிச்சை அளித்து வந்ததாகவும், டாக்டர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

டாக்டர் ராமச்சந்திரன் வாக்குமூலம், பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா உடல்நிலையை பரிசோதிக்க, 2016 மே மாதம், டாக்டர் ராமச்சந்திரன், சென்னை, போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போதே, ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு, மிகவும் அதிகமாக இருந்துள்ளது.

அதைக் கண்ட ராமச்சந்திரன், ‘உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. புதிதாக வந்துள்ள, ‘இன்சுலின்’ மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்’ என, பரிந்துரை செய்துள்ளார். ஆனால், அதற்கு பின், அவர் அழைக்கப்படவில்லை.

இதற்கிடையில், அவரை சசிகலா உறவு டாக்டர் சிவகுமார் தொடர்பு கொண்டு, சில மருந்துகளை, ஜெயலலிதாவுக்கு கொடுக்கலாமா என, கருத்து கேட்டுள்ளார். அதன் பிறகே, தான் பரிந்துரைத்த மருந்துகளை, ஜெயலலிதா எடுத்துக் கொள்ளவில்லை என்பதை, டாக்டர் ராமச்சந்திரன் அறிந்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு, 2016 செப்., 22ல் மயக்கம் ஏற்பட்டுள்ளது. ‘சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு’ என, டாக்டர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவரிடம், ‘2016 மே மாதத்திலேயே, ஜெயலலிதா, உடல்நிலை மோசமாக இருந்தது என்றால், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லையா…’ என, கமிஷன் விசாரணையில் கேட்கப்பட்டுள்ளது, அதற்கு அவர், ‘சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் கேளுங்கள்’ என, பதில் கூறியுள்ளார்.

அவரது வாக்குமூலத்தை தொடர்ந்து, அவர் பரிந்துரைத்த மருந்தை, ஜெயலலிதா உட்கொண்டாரா, இல்லையா; அவர் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறிய பிறகும், ஏன் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்பது உட்பட, பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் விசாரிக்க, விசாரணை கமிஷன் முடிவு செய்துள்ளது.

நேற்றைய விசாரணை குறித்து, சசிகலா வழக்கறிஞர் ராஜ்குமார் பாண்டியன் கூறியதாவது:

அப்பல்லோ டாக்டர் ஜெயஸ்ரீ கோபால், சர்க்கரை நோய் மருத்துவர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜெயஸ்ரீ கோபால், சர்க்கரை மற்றும் தைராய்டு நோய் தொடர்பாக, 2015 முதல், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

மருத்துவமனையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகும், அவர் தினமும் ஜெயலலிதாவை பார்த்து, சிகிச்சை அளித்துள்ளார். சசிகலா, தன் பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டபடி, 2016 டிச., 3, 4ம் தேதி, ஜெயலலிதாவை சந்தித்துள்ளார்.

அப்போது, எய்ம்ஸ் மருத்துவர்கள், ‘பிசியோதெரபிஸ்ட்’ சிகிச்சை அளிக்கும்படி கூறியதை தெரிவித்துள்ளார்.அதற்கு, ஜெயலலிதா இசைவு தெரிவித்து, தலை அசைத்துள்ளார்.

டிச., 4 காலை, 11:00 மணிக்கு, அவரை சந்தித்த போது, அவர் நன்றாக இருந்ததாகவும், சர்க்கரை அளவு ஏற்றம், இறக்கமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இன்று, டாக்டர் சாந்தாராமிடம் விசாரணை நடைபெறவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]