ஜெயம்ரவியுடன் ஜோடியாக நடித்தது அதிர்ஷ்டம்: சாயிஷா

இயக்குனர் விஜய் இயக்கிய ‘வனமகன்’ படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்து தமிழில் அறிமுகமானவர் சாயிஷா. இவர் பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் பேத்தி. அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் விஷால்-கார்த்தி நடிக்கும் ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் நடிக்கிறார். வேறு சில படங்களில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தமிழ் படங்களில் நடிப்பது குறித்து சாயிஷா கூறும் போது….

“தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ள எனக்கு ‘வனமகன்’ படத்தில் தமிழ் முன்னணி நடிகர் ஜெயம்ரவியுடன் ஜோடி சேர்ந்து நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் அறிமுகம் இல்லாதவர் என்பதால் முதலில் ஒருவித அச்சம் ஏற்பட்டது. ஆனால் நான் சந்தித்த முதல் நாளே அவர் சகஜமாக பழகினார்.
தமிழுக்கு நான் புதுவரவு. என்றாலும், எந்தவித ஈகோவும் இல்லாமல் நடந்து கொண்டார். அது அவர் மீது எனது மரியாதையை அதிகப்படுத்தியது. சில காட்சிகளில் நான் அதிக டேக் வாங்கினாலும், அவர் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் மீண்டும் மீண்டும் என்னுடன் நடித்தார்.

தமிழ் வசனம் பற்றி எதுவும் தெரியாமல் இருந்த எனக்கு, அதை புரிந்து கொள்ள உதவி செய்தார். என்னைப் போன்ற மொழி தெரியாத புதுமுகத்துக்கு ஜெயம்ரவியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன்”