ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தடியடிக்கு பின்லேடன் தான் காரணமாம் !

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் கேள்வி நேரம் தொடங்கியபோது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் கூடியிருந்த இளைஞர்கள் மீது தமிழக காவல்துறை நடத்திய தாக்குதல் தொடர்பாக முதல்வர் விளக்க அளிக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். அத்துடன், இது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

binladan

ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முதல்வர் பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களின் போராட்டம் திசை மாறியதாலேயே அவர்கள் மீது குறைந்த அளவு பலத்தை பயன்படுத்தி அதை முறியடித்ததாக கூறினார். மேலும், போராட்டத்தின் கடைசி நாள் அன்று, ஒசாமா பின்லேடனின் போஸ்டர்களை போராட்டக்காரர்கள் சிலர் வைத்திருந்ததாகவும், இது தொடர்பான ஆதாரங்களை சபாநாயகரிடம் அளித்துள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து போராட்டக்காரர்களிடம் எடுத்துக் கூறியும், அவர்கள் போராட்டத்தை கைவிடாத நிலையில் தான் தமிழக காவல்துறை தன் கடமையை செய்ததாகவும் அவையில் முதல்வர் தெரிவித்தார். மேலும், அமைதியான முறையில் சென்று கொண்டிருந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை சட்டவிரோத கும்பல் திசை திருப்பியதாகவும் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.

ஆயினும், முதல்வரின் கருத்துக்கள் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என கூறி, திமுகவினர் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.