ஜப்பான் சூட்டிக்கு வலைவீச்சு

கொழும்பு, கிராண்ட்பாஸ், நாகலகம் வீதி பகுதியிலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 160 மில்லியன் ரூபாய் பெறுமதியான ​பிரவுன் சுகர் ரக ஹெரோய்ன் போதைப்பொருள், கடல் மார்க்கமாகவே இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதென, பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

13 கிலோகிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருளுடன், சந்தேகநபர் ஒருவர், திங்களன்று கைது செய்யப்பட்டார். கறுப்பு நிற பயணப் பொதியில் இட்டு, அந்தப் போதைப்பொருளை எடுத்துச் சென்றுகொண்டிருக்கும் போதே, மேற்படி சந்தேகநபர் கைதானார்.

இதில், ஜப்பான் சூட்டி என்பவரே, பிரதான சந்​தேகநபர் என, அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்டுள்ள கொழும்பு, முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மேற்படி சந்தேகநபர், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட 36 மில்லியன் ரூபாயை, கிராண்ட்பாஸில் உள்ள ஒரு வீட்டுச் சுவரில், மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த நிலையில், பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வீடு, ஜப்பான் சூட்டிக்குச் சொந்தமானதெனவும் இத்தொகைப் பணத்தை வங்கியில் வைப்பிலிட்டால், சந்தேகம் எழக்கூடிய வாய்ப்புள்ளதாலேயே, சுவரில் மறைத்து வைத்திருந்ததாக, சந்தேகநபர் வாக்குமூலமளித்ததாக, பொலிஸார் மேலும் கூறினார்.