ஜப்பானுக்கு செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாத நடுப்பகுதியில் ஜப்பானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்கின்ற ஒரு முயற்சியாக இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும் தனது அர்ப்பணிப்பை ஜப்பான் உறுதிப்படுத்தவுள்ளது.

ஜப்பானில் இருந்து வெளியாகும் Nikkei Asian Review ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 12ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை ஜப்பானுக்கான அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜப்பானிய சக்கரவர்த்தி அகிஹிடோ மற்றும் பேரரசி மிசிகோ ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பில் பொருளாதாரத்துறையில் நெருங்கிய ஒத்துழைப்பை ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே உறுதிப்படுத்த வாய்ப்புகள் உள்ளன என்றும், சுதந்திரமான திறந்த இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.