ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவுகோர ரஷ்யா பறக்கிறார் ஜனாதிபதி

ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கும் முகமாக அமெரிக்காவால் மனிதவுரிமைகள் பேரவையில் கொண்டுவரபடவுள்ள புதிய தீர்மானத்திற்கு ஆதரவுக்கோரவும், ரஷ்யா கடந்த காலங்களில் ஐ.நாவில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை தக்கவைத்துக்கொள்வதன் ஒரு பகுதியாகவும் எதிர்வரும் 22ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவுக்கு பறக்கவுள்ளார்.

இதேவேளை, 23ஆம் திகதி இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள சூழலில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் ஜனாதிபதியுடன் ரஷ்யா சென்று பேச்சுகளை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி

ரஷ்யாவின் அழைப்பின் பேரின் பேரில் ஜனாதிபதி முன்னதாக ரஷ்யா விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும், மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த விவாதங்கள் இறுதிகட்டத்தை நெருங்கும் தருணத்தில் ஜனாதிபதியின் விஜயம் அமையும் என்று எவரும் எதிர்வுக்கூறியிருக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நாவில் கடும் சவால்களை எதிர்கொண்டிருந்த தருணத்திலும்,  2015ஆம் ஆண்டு அமைய பெற்ற மைத்திரி தலைமையிலான புதிய அரசுக்கு ரஷ்யா தொடர்ந்து ஐ.நாவில் ஆதரவை வழங்கி வருகிறது. இம்முறையும் ரஷ்யா இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறது. ரஷ்யா மனிதவுரிமைகள் பேரவையில் உறுப்பு நாடாக இல்லாவிடினும் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் விட்டோ அதிகாரம் கொண்டுள்ள ஐந்து நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று.

அதன் அடிப்படையில் ரஷ்யாவின் ஆதரவு இலங்கைக்கு கட்டாயமானதாகும். ரஷ்யாவின் ஆதரவை தொடர்ந்து இலங்கை தக்கவைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,  எதிர்வரும் 22ஆம் திகதி ஜனாதிபதி மூன்றுநாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளார். இதன்போது ஐ.நாவில் ரஷ்யாவின் ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிக்கவுள்ளதுடன், எதிர்காலத்தில் இலங்கைக்கு ஐ.நா விவகாரம் மற்றும் சர்வதேச அரசியல், பொருளாதார விடயங்களில் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரவுள்ளதாக கூறப்படுகிறது.

இவருடைய பயணத்தில் ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக பிரிட்டனின் இணை அனுசரணையுடன் அமெரிக்கா கொண்டுவரவுள்ள புதிய தீர்மானம் தொடர்பில் களப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவு கலந்துகொள்ளவுள்ளார். 22ஆம் திகதி ஆணையாளரின் அறிக்கை மற்றும் 23ஆம் திகதி புதிய தீர்மானம் கொண்டுவரப்படவுள்ள நிலையிலேயே அவற்றில் பங்குபற்றாது மங்கள சமரவீர ஜனாதிபதியுடனான பயணத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

இலங்கை அரசு இதன்மூலம் இராஜதந்திர காய்நகர்த்தல் எதனையும் மேற்கொள்ளவுள்ளதாக என்பது தொடர்பில் ஆழமான கருத்தாடல்கள் வலுப்பெற்றுள்ளன. என்வாறினும் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மேலும் இரண்டு ஆண்டுகள் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுவது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு தீர்மானத்தை முன்மொழிந்த அமெரிக்காவுக்காவும் ஆதரவு வழங்க மனிதவுரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பச்சைக்கொடி காட்டியுள்ளன.