ஜனாதிபதி, ரணிலை பற்றி எழுதவிருக்கும் புத்தகத்திற்கு நாம் பெயர் வைக்கத் தயாராகவிருக்கிறோம்- அகில விராஜ் காரியவசம் சாடல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவை பற்றி எழுதும் புத்தகத்திற்கு நாம் பெயர் வைக்கத் தயாராகவிருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கண்டி நகரில் நடைபெற்ற ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான மக்களின் நீதிக் குரல் என்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

“மைத்திரிபால சிறிசேன அன்று ஒரு மணித்தியாலத்திற்குள் யாருக்கும் தெரியாமல் யாருக்கும் அறிவிக்காது சட்டபூர்வமற்ற பிரதமர் ஒருவரை நியமித்தார்.

சாதாரணமாக பிரதமர் அமைச்சர்களை நியமிக்கும் போது நேரம் பார்த்து ஊடகங்களுக்கு அறிவிப்பு விடுப்பது வழக்கம். ஆனால் இந்த போலி பிரதமர், அமைச்சர்களை நியமிக்கும் போது ஒரு ஊடகத்திற்கு கூட அறிவித்திருக்க வில்லை.

அரச தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட பதவிப் பிரமான காட்சிகள் ஸ்மார்ட் போன்களில் பதிவு செய்யப்பட்டவை.

பிரதமரை நியமிக்கிறார்கள், அந்த பிரதமரை நியமித்து அதன் பின்னர் 113 பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவதாக போலி வாக்குறுதிகளை வழங்கினார்கள்.

அதன் பின்னர் எழுச்சிப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். அன்றும் கூட அவர்கள் கூறினார்கள் குறித்த தினத்தன்று 113 பெரும்பான்மையை நிரூபித்து, அவர்களது அரசாங்கத்தை அமைத்து காட்டுவதாக

இப்போது பெரும்பான்மை என்ற திரைப்படம் ஒன்றும் வெளிவரப் போகிறது, பெரும்பான்மையை காட்டுவதாக கூறுகிறார்கள் ஆனால் காட்டுகிறார்கள் இல்லை. நாங்களும் ஆவலாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் பெரும்பான்மையை காட்டும் வரையில்.

ஆனால் எங்களது பெரும்பான்மை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. தற்போது 122ஆக இருக்கும் பெரும்பான்மை எதிர் வரும் சில நாட்களில் 130ற்கு உயர்ந்து விடும். இன்னும் சில நாட்கள் சென்றால் 2/3 பெரும்பான்மை அமைப்பது கூட எங்களுக்கு எளிதான விடயமாகி விடும்.

எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயார் ஆனால் நீதியான தேர்தலாக இருந்தால் மட்டுமே நாங்கள் அத் தேர்தலிற்கு தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர், அவர்களுக்கு தேவையான விதத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஒரு போதும் நாம் இடமளிக்க மாட்டோம். அப்படி அவர்களுக்கு செய்ய இடமளித்தால் இந் நாட்டின் சட்டம் நீதி ஜனநாயகத்திற்கு அது எதிரானதாக அமைந்து விடும். அதனால் தான் நாங்கள் கூறுகிறோம் ஜனநாயக ஆட்சிக்குட்பட்டு செயற்பட வேண்டும் என்று

இவர்கள் கூறியதைப் போன்று உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலை நடாத்தி அந்த தேர்தலிலும் அவர்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது சென்றால் மீண்டும் ஒரு வார காலத்தில் பாராளுமன்றை கலைத்தாலும் கலைத்து விடுவார்கள்.

அதனால் இந்த யுத்தத்தை தொடர்ந்து கொண்டு செல்வோம் என தெளிவாக கூறிக்கொள்கிறோம். இப் போராட்டத்தை நாங்கள் தெளிவான, சக்தியான நாடாளுமன்றை உருவாக்கியதன் பின்னரே நிறுத்துவோம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

அதற்காக கட்சி இனம் பாகுபாடின்றி எங்களோடு ஒன்று திரளுங்கள். இப் பிரச்சினையை இலுகுவாக நாடாளுமன்றில் சுமுகமாக தீர்ப்பதாயிருந்தால் அதற்கும் நாங்கள் தயார் ஆனால் வீதியிலிறங்கி தான் தீர்வு காண வேண்டும் என்றால் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நேற்று ஜனாதிபதி கூறியிருந்தார் எங்கள் பிரதமர் பற்றி புத்தகம் ஒன்றை எழுதப் போவதாக எங்களுக்கு முடியும் அதற்கு ஒன்றல்ல பல பெயர்களை கொடுக்க கடந்த 3 வருடங்களில் நடந்த சம்பவங்களை வைத்து மண்வெட்டி, கால் விலங்கு இதைப் போன்று பல்வேறு பெயர்களை எம்மால் தர முடியும்.

நாங்கள் அமைச்சர்களாக இருக்கும் போது மக்களுக்கு பல அபிவிருத்தி திட்டங்களை செய்தோம் மண்வெட்டி மற்றும் கால் விலங்குகளை போட்ட போதும் நாங்கள் மக்களுக்கு சேவைகளை செய்தோம்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]