ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் உரை 

ஐக்கிய நாடுகளின் 72வது பொதுச் சபை கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உரையாற்றவுள்ளார்.

நியுயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தின் இடம்பெறும் இந்த கூட்டத்தொடரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட அரச தலைவர்கள் பங்குகொள்கின்றனர்.

உலக நாடுகளின் அரச தலைவர்களின் ஒன்றிணைந்த அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்கால பயணம் குறித்து இதன் போது விரிவாக ஆராயப்படவுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் அரசியல் நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து உரையாற்றவுள்ளார்.

அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர், ஐக்கிய நாடுகளின் பொதுசபைக் கூட்டத்தில் உரையாற்றும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அதேநேரம் இந்த மாநாட்டுக்கு சமாந்திரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் சிவில் அமைப்புகளின் கூட்டத்தொடரிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார்.

மேலும் அங்கு அவர் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.