ஜனாதிபதி, பிரதமரின் ஆலோசனைக்கு அமைய உரிய நடவடிக்கை

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்கெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இதனை தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இன்று யாழுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, யாழ் பொலிஸ் தலைமையத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பை அடுத்து, ஊடகவியலாளர்களை சந்தித்போது, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போதுள்ள அரசாங்கமும் சட்ட ஒழுங்கு அமைச்சும் உரிய முறையில் பொதுமக்களுக்கு சேவையாற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் சட்ட ஒழுங்கினை நிலைநாட்டுவதற்குப் பொலிஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாள்வெட்டு மற்றும் வன்புணர்வு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இவ்வாறான வாள்வெட்டு மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை பொது மக்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த காலங்களில் 12 இலட்சத்து 5 ஆயிரம் கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சா போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]