ஜனாதிபதி கழிவு நீர் அகற்றும் வடிகாலமைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் – துரைரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபை பிரிவுகளில் மக்கள் செறிந்து வாழுகின்ற பகுதியில் வீடுகள் தோறும், வியாபாரத் தலங்கள், உணவகங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரை அகற்றுவதற்கான வடிகால் அமைப்புத் திட்டத்தை தொடங்குவதற்கு மத்திய, மாகாண அரசு நிதிஓதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மு.கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் மாண்புமிகு ஜனாதிபதிக்கும், கௌரவ உள்ளூராட்சி அமைச்சருக்கும், கௌரவஆளுனர் அவர்களுக்கும் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 உள்ளூராட்சி சபைகளிலும் குறிப்பிட்ட உள்ள+ராட்சி சபைகளில் மக்களின் தொகை குறைவாகவும், சில உள்ளுராட்சி சபைகளில் மக்கள் தொகை அதிகளவாகவும் காணப்படுகின்றன.

குறிப்பிட்ட சபைகளில் குறிப்பாக மாநகரசபை உட்பட ஏனைய சில உள்ள+ராட்சி சபைகளிலும் மக்கள் செறிந்து வாழ்ந்து வருகின்றனர். செறிந்து வாழ்ந்து வரும் பகுதிகளிலுள்ள வீடுகளில்,வர்த்தக நிலையங்கள், உணவகங்களிருந்து வெளியேறும் கழிவுநீரையும் அகற்ற முடியாமல் சம்பந்தப்பட்டோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். சொல்ல முடியாத துன்பத்தில் உள்ள பலருக்கு உள்ளூராட்சி சபை சிறப்பான சேவைகளைச் செய்து வந்தாலும் சம்பந்தப்பட்டோருக்கு சரியான தீர்வு எட்டப்படவில்லை.

குறிப்பாக மக்கள் செறிந்து வாழ்கின்ற பல நகரப்புறங்களில் உள்ள வர்த்தகர்களும், வீட்டு உரிமையாளர்களும், உணவகங்களிலுள்ள உரிமையாளர்களும் மனவேதனையுடன் உள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. வசதி வாய்ப்புடன் உள்ள ஒருசிலர் தொழில்நுட்ப ரீதியான கழிவகற்றல் முறையை இயந்திரம் ஊடாக பயன்படுத்தி திருப்தியடைந்தாலும். 95 வீதமானவர்கள் இந்த வசதி வாய்ப்பற்ற நிலையில் உள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இவைமட்டுமின்றி இப்பகுதிகளிலுள்ள வடிகான்கள், வீதிகள் பாரிய அளவில் அபிவிருத்தி செய்வதற்கு முன்பே கழிவுநீர் அகற்றுவதற்கான வடிகானுக்குரிய திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும. உள்ளூராட்சி சபைகள் மிகக் கூடுதலாக எதிர்நோக்கும் பல பிரச்சினைகளில் பிரதானமானவை வெள்ளநீரும், கழிவுநீர் அகற்றும் விடயமுமே.

எனவே கழிவுநீரை அகற்றுவதற்கு தாய்த்திட்டத்தை தயாரித்து வடிகானை அமைப்பதற்குமான உரிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இவ்விடயம் தொடர்பாக மாவட்டத்திலுள்ள 12 உள்ளூராட்சி சபைகளும் ஆர்வமாக இருப்பதாகவும், அக்கறையுடன் வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நிதி தடையாக இருப்பதையும் அறியக் கூடியதாக உள்ளது. இவ்விடயத்தில் மக்கள்பிரதிநிதிகள் ஆர்வமாக உள்ளதால் இத்திட்டம் முன்னோடியாக அமையும்.

இக் கழிவு நீரை உரிய முறையில் அகற்றப்படாததன் காரணத்தினால் பல பிரச்சினைகள் உருவாக வாய்ப்புக்கள் அமையும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]