சைட்டம் விவகாரம் ; ஜனாதிபதியும், பிரமரும் வைத்திய பீடத்துடன் உடனடியாக பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டும் ; ஜாதிக ஹெல உறுமய

சைட்டம் விவகாரம் குறித்து ஜனாதிபதியும், பிரமரும் வைத்திய பீடத்துடன் உடனடியாக பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.

பத்தரமுல்லை அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமயக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸ் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

சைட்டம் விவகாரம் தொடர்பில் நாம் தொடர்ந்தும் எமது தெளிவான நிலைப்பாட்டை முன்வைத்து வருகிறோம். சைட்டத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் நாம் வலியுறுத்தியே வருகிறோம்.

வைத்திய கல்விக்கு உகந்த வெட்டுப்புள்ளியைப் பெற்றுள்ள மாணவர்களுக்கு வைத்திய பீடத்தின் ஆலோசனைகளைப் பெற்று அவர்களுக்கு வைத்திய கல்வியை தொடர்வதற்கும், வெட்டுப்புள்ளி பெறாத மாணவர்கள் வழங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை நாம் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், இந்தப் பிரச்சினையை நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பால் சென்று தீர்க்க வேண்டும் என்பது தான் எமது நோக்கமாக இருக்கின்றது. ஏனெனில், இந்தப் பிரச்சினை எழுந்த காலம் முதல் சுமார் 12 ஆயிரம் மாணவர்கள் சுதந்திரக் கல்வியை இழந்துள்ளனர். அத்தோடு, நாட்டின் எதிர்க்கால வைத்திய துறையும் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்க்காலமும் பாரிய பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.

இந்தப் பிரச்சினையை வீதிகளிலோ அல்லது வைத்தியசாலைகளிலோ தீர்க்காது வைத்தியபீடத்துடன் கலந்துரையாடித் தான் முடிவுக்கு கொண்டுவர முடியும். போராட்டக்காரர்களுடனும் இதுவிடயம் குறித்து பேசாவிடின், நாட்டில் பாரிய பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

உண்மையில், இந்தப் பிரச்சினைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது வைத்தியர் நெவில் பெர்ணான்டோவோ காரணம் அன்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தந்தையாவார். தமது குடும்பத்தின் தேவைக்காக இவ்வாறான ஒரு கல்லூரியை ஆரம்பித்து அதற்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு, தற்போது இதனை மூடவேண்டும் என்று அவர் கருத்து வெளியிடுகிறார்.

இதுபோன்ற காரணங்களுக்காகத் தான் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக முடிவு காணப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். எனவே, ஜனாதிபதியும் பிரதமரும் இதுவிடயம் தொடர்பில் வைத்தியபீடத்துடன் உடனடியாக கலந்துரையாடி சைட்டம் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]