சைட்டம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மீதான துப்பாக்கிப் பிரயோகம் குறித்து விரிவான விசாரணை – பிரதமர்

சைட்டம் மருத்துவ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மீத நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சைட்டம் மருத்தவ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மீத நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் தவறாக அர்த்தம் கற்பிக்கும் முயற்சிகள் இடம்பெறுவதால் அது பற்றி மக்களுக்கு விளக்கம் அளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதில் அளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் : இது பற்றிய அறிக்கை கிடைத்தவுடன் மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்றார்.

சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல உரையாற்றுகையில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை மாற்றும் அதிகாரம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலேயே தனியார் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கென 600 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டாமென்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இதனை மீறி செயற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.