செல்ஃபி எடுப்பதால் இலங்கையில் கடந்த ஆறு மாதங்களுக்குள் 26 பேர் இறந்துள்ளனா்

செல்ஃபி எடுப்பதால்செல்பேசிகளின் மூலம் செல்ஃபி எனப்படும் சுய படங்களை கவன குறைவாக எடுப்பதால் ஏற்படும் உயிரிழப்புக்களும், விபத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக இலங்கை வீதி பாதுகாப்பு அதிகார சபை எச்சரித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள இந்த அதிகார சபையின் தலைவர் சிசிர கோதாகொட இந்த ஆண்டில் கடந்த ஆறு மாதங்களுக்குள் இவ்வாறு 26 பேர் இறந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதிக உயிரிழப்புக்கள் ரயில் பாதைகளில் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், அவ்விடங்களில் கவன குறைவாக சுய படங்களை எடுத்ததால்தான் இவை நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பொது வீதிகள், மலைப்பிரதேங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிக்களுக்கு அருகில் கவன குறைவாக சுய படங்களை எடுத்தபோது பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சுய படங்களை எடுக்கும்போது மிகுந்த பாதுகாப்புடன், கவனமாகவும் செயல்படுவதற்கு பொது மக்களை வழிநடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறிய இலங்கையின் வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிசிர கோதாகொட, இதன் மூலம் உயிரிழப்புகள் மற்றும் விபத்துக்களை தடுக்க முடியுமென்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரயில் பாதைகளில் சுய படங்களை எடுப்பதை முற்றாக தடை செய்துள்ளதாக ரயில்வே திணைக்கள பாதுகாப்பு பிரிவின் தலைமை அதிகாரி அனுரா பிரேமரத்ன தெரிவத்துள்ளார்.

ரயில் பாதைகளில் சுய படங்களை எடுப்பதை தவிர்க்க பொது மக்களுக்கு தெளிவான அறிவிப்புக்கள் ரயில் பாதைகள் மற்றும் ரயில்களில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதையும் பொருட்படுத்தாமல் தவறு செய்யும் நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், அவ்வாறு செய்வோருக்கு ரூ. 3000 வரை அபராதம் விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாகவும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]