சுவரில் பஸ் மோதிய கோர விபத்தில் 36 பேர் பலி!

சீனாவின் சான்சி மாகாணத்தில் தொலைதூர பேருந்து சுரங்கப் பாதை சுவரின்மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 50 பேர்வரை பயணிக்கும் அந்த தொலைதூர பேருந்து சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்க்டு நகரில் இருந்து மத்திய சீனாவில் உள்ள லுயாங் நகரை நோக்கிசென்று கொண்டிருந்தது.

சான்சி மாகாணத்தின் தலைநகரான சியான் –  கன்சாங் நான்குவழிச் சாலையில் உள்ள குயின்லிங் சுரங்கப்பாதை வழியாக சென்றபோது (உள்ளூர் நேரப்படி) பின்னிரவு 11.30 மணியளவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சுரங்கப்பாதையில் பக்கவாட்டு சுவரின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்த 13 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவில் நெடுஞ்சாலைகளில் அதிக வேகம் காரணமாக இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவது பெருகி வருகிறது. சீனாவில் ஆண்டுதோறும் சுமார் 2.6 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.