சுழற்பந்து வீச்சாளர்கள்

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

முரளி விஜய் மற்றும் விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்துள்ளது. சராசரியாக ஒரு ஓவருக்கு நான்கு ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. இதனால் இலங்கை பந்து வீச்சு பயிற்சியாளர் விரக்தியடைந்துள்ளார்.

அவர் சுழற்பந்து வீச்சாளர்களான தில்ருவான் பெரேரா மற்றும் சண்டகனை கடுமையாக சாடியுள்ளார். இன்றைய ஆட்டம் குறித்து இலங்கை பந்து வீச்சு பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயகே கூறுகையில் ‘‘இந்திய பேட்ஸ்மேன்களின் லெவல் மாறுபட்டது என்பது எல்லோருக்கும்மே தெரியும். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் இன்று செயல்பட்டதற்கு சாக்குபோக்கு சொல்ல முடியாது.

தில்ருவான் பெரேரா 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தாலும், இன்று பந்து வீசியதை அவர் பார்த்திருந்தால் மிகவும் ஏமாற்றம் அடைவார். எனது பார்வையில் எங்களது பந்து வீச்சாளர்கள் 70 ரன்கள் அதிகமாக விட்டுக்கொடுத்து விட்டார்கள்’’ என்றார்.

தில்ருவான் பெரேரா, சண்டகன் 44 ஓவர்களில் 207 ரன்கள் விட்டுக்கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.