“கொடுத்ததை வாங்கிக் கொள்ளுங்கள் என கூறக்கூடிய ஒரு கூட்டத்தின் தலைவர் சம்பந்தன்” – சுரேஸ் பிறேமச்சந்திரன்

சுரேஸ் பிறேமச்சந்திரன்

தமிழ் மக்கள் பலவீனப்பட்டுவிட்டார்கள் புலிகள் மௌனிக்கப்பட்டுவிட்டார்கள் கொடுத்ததை வாங்கிக் கொள்ளுங்கள் என கூறக்கூடிய ஒரு கூட்டம் உள்ளது அந்த கூட்டத்தின் தலைவராக சம்பந்தனை நான் நம்புகின்றேன் என ஈழ மக்கள் விடுதலை புரட்சிகர முன்னனி கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களிப்பதன் மூலம் எமது அரசியல் அபிலாசைகளை குழிதோண்டிப் புதைத்தவர்களாகவே இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்

மட்டக்கள்ப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசபைகுட்குடியிருப்பு வட்டாரத்தில் வியாழக்கிழமை (25) மாலை நடைபெற்ற தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைபின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – “தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்களுக்குரிய ஒரு தீர்வுத் திட்டத்தை பெற்றுக்கொடுக்காமல் அரசினால் கொண்டுவரப்பட்ட அரைகுறை தீர்வுத் திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அரைகுறைத் தீர்வுத் திட்டத்திற்கான ஆணையைக் கேட்டுத்தான் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களிப்பதன் மூலம் அரைகுறைத் தீர்வுத் திட்டத்தை வடகிழக்கில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என அரசாங்கத்திடம் மாத்திரமல்ல சர்வதேசத்திடமும் எடுத்துக் கூறி எமக்கு வழங்குவதற்கு முற்படலாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களிப்பதன் எமது அரசில் அபிலாசைகளை குழிதோண்டிப் புதைத்தவர்களாகவே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

புதிய தலைமைத்துவம் தேவை எமது இழப்புக்களுக்கு ஈடாக எமது உரிமைகள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். இந்த மண்ணில் 3500 வருடங்கள் வாழ்ந்தவர்கள் இனிமேலும் வாழ வேண்டும். எமது மொழி இனம், கலாசாரம், பன்பாடு பாதுகாக்கப்படவேண்டும் அவ்வாறு நாங்கள் செயற்பட வேண்டும். எமது மண்ணைப் பாதுகாக்க பௌத்த பிக்குவுடன் செல்லக்கூடிய கேவலமான நிலை இனிமேலும் வரக்கூடாது

இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் திருந்த வேண்டும் அவர்களது தவறினை உணரவேண்டும் அதற்கான வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிப்பதை மறந்து மாற்றுத் தலைமைதுவத்துக்காக குரல் கொடுக்க கூடிய உதய சூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பான எந்தவித வகிபாகத்தையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி செய்யவும் இல்லை. வடக்கிலே 65000 ஏக்கர் காணி இராணுவத்தின் வசம் உள்ளது. இதில் 35000 ஏக்கர் காணி தமிழ் மக்களுக்குரியது அவர்கள் இன்னும் போராடுகிறர்கள்.

வடக்கு மாகாணத்தில் 10 இலட்சம் மக்கள்

வடக்கு மாகாணத்தில் 10 இலட்சம் மக்கள் வாழும் இடத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இராணுவத்தினர் உள்ளார்கள். இதைவிட பொலிஸ் விஷேட அதிரடிப்படை, விமானபடை மற்றும் கடற்படை உள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்பும் இராணுவம் தேவையா, என கேட்டால் தேசிய பாதுகாப்பு என கூறுகிறார்கள். எந்த நாடு இங்கு வந்து பிடிக்கப்போகிறது.

வரவு செலவுத் திட்டத்தில் 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியை பௌத்த மத மக்களே இல்லாத இடங்களில் பௌத்த விகாரைகள் கட்டுவதற்கு கொடுக்கிறார்கள்.

பௌத்தம் என்பது இலங்கையில் முதன்மையானது இது இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பௌத்தத்திற்க முதலிடம் ஏனைய மதங்கள் அனைத்தும் பௌத்த மதத்திற்குட்பட்டதாக இருக்க முடியும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது தங்களது பிரதேசத்தில் தங்களது மத்தை பின்பற்றிக்கொண்டு இருக்க வேண்டும். இதை விட்டுக்கொடுக்க அரசாங்கம் தயாராக இல்லை.

இதைப்பற்றி பேசினால் சிங்கள மக்கள் குழம்பிவிடுவார்கள் அரசாங்கம் எமக்கு ஒன்றையும் தராது சிங்கள பௌத்த மேலாண்மைக்கு கட்டுப்பட்டவர்களாக நீங்களும் இருக்க வேண்டும் என சம்பந்தனும் சுமந்திரனும் கூறிகிறார்கள். இவ்வாறு இருக்க வேண்டுமாகாவிருந்தால் நீங்கள் எங்களுக்கு எதற்கு இந்த பதிலை சொல்ல தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையா?

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் சரணாகதியடைந்தவர்களாக சுகபோகங்களைப் பெற்றுக்கொண்டவர்களாக இருக்கிறார்கள் சுமந்திரனுக்கு கொழும்பு 7 கறுவாத் தோட்டத்தில் 3 இலட்சம் வாடகைக்கு கொடுக்க கூடிய பங்களாவை அரசாங்கம் 135 ரூபா வடகைகு வழங்கியுள்ளது.

சம்பந்தன் ஐயுh முதியவர் அனுபவசாலி இராஜதந்திரமாக செயற்படுவார் பல மொழிகள் தெரிந்தவர் என்று எல்லாம் நாங்கள் கூறினோம் ஆனால் அவர் அவருடைய வயசுக்கு ஏற்ப அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து எதனையும் பெற்றுக்கொள்ள தயாராக இல்லை” என்றார்.