சுரேஸ்பிரேமச்சந்திரனின் கருத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – மாவை

சுரேஸ்பிரேமச்சந்திரனின் கருத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – மாவை

மாவை

யாழ்ப்பாணம், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்துசெல்வதாக கூறியுள்ள சுரேஸ்பிரேமச்சந்திரனின் கருத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால், தமிழ் மக்கள் ஒற்றுமைக்காக, கட்சிகளுக்கு அப்பால், எமது மக்களின்; கொள்கைக்காகவும், இலட்சியத்திற்காகவும், மண்ணின் விடுதலைக்காகவும், மக்களின் விடுதலைக்காகவும், தமிழ் மக்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டியது மிக முக்கியமானதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். அலுவலகத்தில் இன்று (22.11) மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, துமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி பிரிந்து செல்வது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டம் என்று இருந்த காலத்தில் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டிய சந்தர்ப்பம் சிறந்ததாக அமைந்திருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு இருந்த போது, சில கட்சிகள் கூட்டமைப்பில் சேரவில்லை. உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களிலும் கூட்டமைப்பில் இருந்த 4 கட்சிகளை தவிர்ந்த வெளியில் இருந்த கட்சிகளுடனும் இணைந்து செயற்பட்டோம்.

சிலர் எமது கூட்டணியில் இருந்தும் பிரிந்து செயலாற்றி வந்துள்ளார்கள். தற்போது, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தேர்தலில் ஈடுபட வேண்டுமென்ற தீர்மானத்தினை எடுத்திருக்கின்றார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொறுப்பு வாய்ந்த எமது தலைமையோ, தமிழரசுக் கட்சி தலைமையோ எவரையும் வெளியேற்ற வேண்டுமென்ற கருத்தினைக் கொண்டிருக்கவில்லை. அவ்வாறான எந்த தீர்மானத்தினையும் எடுக்கவில்லை. தனியான கட்சி எதுக்கும் மாறாக செயற்படவில்லை.

இந்த தேர்தலுக்காக மட்டும் ஒன்றுபடுவதைப் பற்றிப் பேசுவதல்ல. தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சிகளுக்கு அப்பால், எமது மக்கள் கொள்கைக்காகவும், இலட்சியத்திற்காகவும், மண்ணின் விடுதலைக்காகவும், மக்களின் விடுதலைக்காகவும், மக்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டுமென்று மிக முக்கியமாக கருதுகின்றோம்.

ஓற்றுமையாக ஒரு தேசிய கூட்டமைப்பு உருவாகிய பொழுது புளொட் அமைப்பு அப்போது இணைந்திருக்கவில்லை. கடந்த உள்ளுராட்சி தேர்தலின் போது, புளொட் அமைப்பினை இணைக்க வேண்டிய சூழ்நிலை கருதி, புளொட் அமைப்பினை இணைத்து செயற்பட்டு வருகின்றோம்.
இன்றும் பல கட்சிகள் எம்மோடு இணைந்து செயற்பட விரும்புகின்றார்கள். அவற்றினை எல்லாம் பரிசீலித்து மக்களின் ஒற்றுமைக்காக என்றும் செயற்படுவதற்கு ஆயத்தமாக உள்ளோம்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் அதிகமாக பேசியிருக்கின்றார். அவரின் கருத்துக்களுக்கு இதுவரையில் எந்தவித பதில்களும் வழங்கவில்லை. காரணம் எமது ஒற்றுமை கருதி, எனவே, அவர் சொல்லும் கதைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]