சுயாதீனத்தை மஹிந்த ராஜபக்ஷ விற்றுவிட்டார்

பணம் மற்றும் அதிகார ஆசையில் நாட்டின் கொள்கையையும் சுயாதீனத்தையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விற்றுவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீன நிறுவனம் நிதி வழங்கியதாக நியூயோர்க டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சைனா ஹாபர் நிறுவனம் தேர்தல் காலத்தில் மில்லியன் கணக்கில் பணத்தை வழங்கியுள்ளது. அடிக்கடி மில்லியன் கணக்கில் கசோலைகள் மாற்றப்பட்டுள்ளன.

சீனா தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள இவ்வாறு செய்துள்ளது. அரச தலைவர்களை பணத்திற்கு வாங்கியுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஊழல் சர்வதேச ஊடகத்தின் ஊடாக வெளிவந்துள்ளது. எதற்காக வெளிவந்தது, எவ்வாறு வெளிவந்தது என்பதை விடவும் நடைபெற்ற ஊழல் குறித்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ சீனாவிடம் வாங்கிய 7.6 மில்லியன் டொலர் குறித்து விசாரிக்க வேண்டும். அவர் நாடாளுமன்றத்தில் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும். ஒரு தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்தால் அதற்கு உரிய பதிலை கூற வேண்டியது எதிரணியின் கடமையாகும்.

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு அவர் ஒரு ஜனாதிபதியாகவோ, எதிர்கால தலைவராகவோ அல்லாது ஒரு சாதாரண குடிமகனாக பதில் கூற வேண்டும் என, அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]