சர்வதேசம் தமிழர் பக்கம் என்பதால் அச்சத்தில் அரசு – சுமந்திரன்

சர்வதேச சமூகம் தமிழர்கள் பக்கம் இருப்பதைக் கண்டு அரசு பயப்படுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று வடமராட்சி கட்டைக்காட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 சுமந்திரன்
சுமந்திரன்

காணாமல்போனோர் விவகாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அவர்கள் உயிரோடு இருந்தால் விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் எப்படி இல்லாமல் போனார்கள்? அதற்குப் பொறுப்பானவர்கள் யார்? அவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய பொறிமுறை என்ன? என்பதை அரசு சொல்ல வேண்டும்.

அரசியல் கைதிகளில் வழக்கில்லாமல் இப்போது எவரும் இல்லை. 80 தொடக்கம் 90 பேர் வரை வழக்குகளோடு இருக்கின்றனர். அவர்களில் அரைவாசிப் பேர் நீதிமன்றினால் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள். அவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மட்டுமே பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க முடியும். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எஞ்சியோரின் வழக்குகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.

மக்களின் காணிகள் பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து மீளப் பெறப்பட்ட வேண்டும். அவை மக்களிடமே கையளிக்கப்பட வேண்டும். இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடந்த திங்கட்கிழமை வலியுறுத்தியிருந்தார்.

 சுமந்திரன்
சுமந்திரன்

புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் நிறைவில் நாம் பொது வாக்கெடுப்புக் கோருவதை சிலர் பிழை என்கின்றார்கள். பெரும்பான்மை சிங்கள மக்கள் இருக்கின்ற நாட்டிலே பொது வாக்கெடுப்பில் வெல்ல முடியுமா என்று கேட்கின்றார்கள். நியாயமான தீர்வு, நாட்டின் சுபீட்சத்துக்கான தீர்வு முன்வைக்கப்பட்டால் சிங்கள மக்களும் ஆதரவு வழங்குவார்கள். தமது போர் வெற்றி மீட்பரையே தூக்கி எறிந்த 48 சதவீதமான சிங்கள மக்கள், நியாயமான விடயத்துக்காக ஏன் ஆதரவு வழங்கமாட்டார்கள் ?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேசிய அரசின் அமைச்சர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுத்தால் நாடு முன்னேறும் என்று சொன்னார். பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பார்த்து, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக நீங்கள் நிறையத் திட்டம் வைத்திருக்கின்றீர்கள். அது எனக்குத் தெரியும். முதலில் எங்களுக்கு நீதியை நியாயமான தீர்வைத் தாருங்கள். அதன் பின்னர் இந்த நாட்டை எவராலும் பொருளாதார ரீதியில் வீழ்த்த முடியாது என்றார்.

இதைச் சொல்லி முடித்து விட்டு ஜனாதிபதி மைத்திரியைப் பார்த்து, இதனை நீங்கள் செய்யாவிட்டால் இந்த நாடு ஒருபோதும் உருப்படாது என்றார்.

 சுமந்திரன்
சுமந்திரன்

நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும். அது சிங்கள மக்களுக்கும் தேவை என்பதை இப்போதைய ஆட்சியாளர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். ஆனாலும், அதனைச் செய்வதில் தயக்கம், பழைய சிந்தனை, ஏன் இதனைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம், கொடுக்காமல் விடலாமா என்ற இந்தச் சிந்தனை பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும்கூட இருக்கின்றது. கொடுக்கக் கூடியதைக் குறைத்துக் கொடுத்துச் சமாளித்து விடலாமா? என்று சிந்திக்கின்றார்கள். அவர்கள் அப்படிச் சிந்திப்பதில் தவறில்லை. அப்படிச் சிந்திப்பவர்களுக்குக்கூட உலக யதார்த்தம் புரிந்திருக்கின்றது.

சர்வதேச சமூகம் எங்களுடன் இருப்பதைக் கண்டு அவர்கள் பயப்படுகின்றார்கள். ஆனால், எங்களில் சிலர் இங்கே சர்வதேச சமூகம் எதுவும் செய்யவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஐ.நா. எங்களை கைவிட்டு விட்டது என்று வாய் கூசாமல் சொல்கின்றார்கள். ஐ.நா எங்களை எங்கே ஐயா கைவிட்டு விட்டது? சர்வதேச சமூகம் எங்களுடன் இருப்பதை பலர் குழப்பியடிக்க முயல்கின்றார்கள். சர்வதேச சமூகம் எங்களுடன் இருப்பதைக் கண்டு பயப்படுகின்ற அரசுக்கு, சர்வதேச சமூகத்தை எங்களிடமிருந்து விரட்டியடிக்க எங்களில் சிலர் முயல்கின்றார்கள் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]