சுமந்திரன் எம்.பி. கொலை முயற்சி வழக்கிலுள்ள சந்தேகநபர் ஒருவர் சிறைச்சாலையில் மோசமாகத் தாக்கப்பட்டமைக்குக் கிளிநொச்சி நீதிமன்றில் அனைத்துச் சட்டத்தரணிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். தாக்கப்பட்டமைக்கு நீதி கோரிய சட்டத்தரணிகள் இது தொடர்பில் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி நீதி அமைச்சுக்கும் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொலைசெய்ய முயற்சித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட சந்தேகநபர்களின் வழக்கு கிளிநொச்சி நீதிமன்றில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது.
தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் தாக்கப்பட்ட விடயம் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
அந்தக் கைதி நடக்க முடியாத நிலையில் ஊன்றுகோலுடன் நீதிமன்றுக்கு வந்திருந்தார். அவரது தாயார் நீதிமன்றில் அழுதபோது அந்தக் கைதியும் நீதிவான் முன்னிலையில் கண்ணீர் விட்டழுதார்.
சிறைச்சாலையில் தாக்கப்பட்டமைக்கு எதிராகக் கிளிநொச்சி நீதிமன்றில் நேற்றுமுன்தினம் அனைத்துச் சட்டத்தரணிகளும் குரல் கொடுத்துக் கண்டித்தனர். கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். கைதிகளை அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்திருக்காது யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் என்று சட்டத்தரணிகள் கோரினர். அதனைப் பரிசீலித்த நீதிமன்று 5 சந்தேகநபர்களையும் யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு உத்தரவிட்டது.
தன்னைத் தாக்கியவர்களைத் தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்று அந்தக் கைதி நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
அது பற்றி ஆராய்ந்த நீதிமன்று, தாக்குதலுக்குக் காரணமாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பிலான அறிக்கையை அடுத்த தவணையில் மன்றில் சமர்ப்பிக்கும்படியும், தாக்குதலுக்குள்ளான சந்தேகநபர்களைச் சட்ட வைத்திய அதிகாரியிடம் காண்பித்து மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது.
“அண்மைய நாட்களாகச் சிறைச்சாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னரும் தர்மபுரத்தைச் சேர்ந்த ஒருவர் மறியல் கைதியாக வவுனியா சிறைச்சாலையில் இருந்தபோது தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுப் பின்னர் உயிரிழந்தார் என்பதனையும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பிலேயே நீதித்துறை மற்றும் சிறைச்சாலை ஆணையாளருக்கு தெரியப்படுத்திக் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்தனர்.
இந்த வழக்கு எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]