சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதென்பது இது புதிதான விடயமல்ல

சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதென்பது இது புதிதான விடயமல்ல

யாழ்ப்பாணம்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதென்பது இது புதிதான விடயமல்ல. அவர் அரசின் அங்கம் வகிக்கும் ஒரு முக்கிய நபர். ஆவர் மக்கள் மத்தியில் சென்றால் அடி விழும் என்பதற்காக பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஸேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஒரு அங்கம். அதனைப் பிரித்துப் பார்க்க முடியாது. சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்பட்டதோ இல்லையோ, தமது சொந்தக் கட்சியில் உள்ள அமைச்சர்களுக்கு மேலாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தினை நல்லாட்சி அரசாங்கம் வைத்திருக்கின்றதென்பது அனைவரும் அறிந்த விடயம்.

ஒரு அமைச்சருக்கு வழங்கக் கூடிய பாதுகாப்பினையும் விட கூடிய பாதுகாப்பு எதிர்க்கட்சி தலைவருக்கும், பேச்சாளருக்கும் உள்ளது. தமது சொந்த மக்களை சந்திக்க முடியாது. அவ்வாறு சந்தித்தால் அடி விழும் என்ற நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படுகின்றதெனில் எந்தளவிற்கு செல்வாக்கு மிக்கவர்களாக இந்த அரசுடன் இருக்கின்றார்கள் என்பதனை மக்கள் விளங்கிக்கொள்ள முடியும்.

இந்த அரசாங்கத்தில் மட்டுமன்றி, கடந்த அரசாங்கத்திலும் 3வது அதி உயர் பாதுகாப்புக்கள் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், நீலம் திருச்செல்வத்திற்கும் வழங்கப்பட்டிருந்தது.

அரசாங்கத்திற்கு எதிராக போராடி உரிமைகளைப் பெற்றுக்கொள்கின்றோம் எனக் கூறிக்கொண்டு மக்கள் மத்தியில் சென்று வாக்குகளைக் கேட்கின்றார்கள். ஆனால் அந்த அரசாங்கம் தான் அவர்களை அதிகமாக பாதுகாப்பதற்கு விரும்புகின்றது.

யார் அரசாங்கத்துடன், எந்தக் கோணங்களில் இருக்கின்றார்கள் என்பது பற்றி மக்கள் விளங்கிக்கொள்வார்கள். இந்த விடயங்களை காலம் தாழ்த்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன என்பதே கவலையளிக்கின்றது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]