சுதந்திரக் கட்சியின் தலைமை மீது மக்கள் நம்பிக்கையிழந்துவிட்டனர்:எதிரணி தெரிவிப்பு

Duminda dissanayake

இன்னும் கொஞ்ச நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எஞ்சியிருக்க போவது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், செயலாளர் துமிந்த திஸாநாயக்கவும்தான் என்று பொது எதிரணி தெரிவித்துள்ளது.

ஊடகம்பொலவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணத்துங்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வீட்டில் கூலிக்கு இருந்தவர் வீட்டை சொந்தமாகிக்கொள்ளும் செயற்பாடே இன்று சு.கவில் நடந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேறு அரசியல் சக்திகளுக்கு அடிப்பணிந்துள்ளது. இதற்கான முழுப் பொறுப்பையும் கட்சியின் தலைவரும், செயலாளருமே ஏற்க வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அதன் தலைமைத்துவம் மீது நம்பிக்கையில்லை. பாரிய அளவிளான உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். கூடிய விரைவில் கட்சியன் தலைவரும், செயலாளரும் மாத்திரமே எஞ்சியிருப்பார்கள் என்று எமக்கு கண்கூடாக தெரிகிறது. மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பக்கமே உள்ளனர் என்பதை எவராலும் நிராகரிக்க முடியாது.

மக்களின் வாக்குகளில் தெரிவாகிய நாம் மக்களின் கருத்துகளுக்குச் செவிசாய்க்க வேண்டும். தேர்தலில் தோல்வியடைந்து தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டவர்கள் போன்று எங்களால் தலையாட்ட முடியாது.

மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் நாங்கள் தலைவராக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவத்தில் அமர்த்தும்வரை எங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை.