முகப்பு News India சீரியல் பார்த்துக்கொண்டு சாப்பாடு போடாத மனைவி- கணவன் செய்த கொடூர செயல்

சீரியல் பார்த்துக்கொண்டு சாப்பாடு போடாத மனைவி- கணவன் செய்த கொடூர செயல்

முன்பெல்லாம் டிவி சீரியல்கள் வந்த புதிதில் கணவன்கள் விளையாட்டாக கூறினார்கள், “சீரியல் ஆரம்பிச்சிட்டா பசின்னு வந்து புருஷனுக்கு சோறு கூட போடுவது இல்லை” என்று. கணவனுக்கு சாப்பாடு போடாத விஷயம் கூட அப்போது ஜோக்காக எடுத்து கொள்ளப்பட்டது. ஆனால் கும்பகோணத்தில் ஒரு கணவன், அதை படு சீரியஸாக்கி விட்டு ஏடாகூடம் செய்துள்ளார்.

பட்டீஸ்வரம் அருகே முழையூர் இந்திரா நகரை சேர்ந்தவர்கள் சிவானந்தம் – அருண்மொழி தம்பதி. சிவானந்தம் ஒரு கூலி தொழிலாளி. கல்யாணம் ஆகி 5 வருடங்களான இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சிவானந்தத்திற்கு மதுப்பழக்கம் உள்ளதால் தினமும் போதையில் வீட்டுக்கு வருவாராம் அப்படித்தான் சம்பவத்தன்று தள்ளாடியபடியே வந்துள்ளார்.

அருண்மொழி டிவி பார்த்து கொண்டிருந்திருக்கிறார். “பசிக்குது.. சாப்பாடு போடு” என்று சிவானந்தம் சொல்ல, டிவியிலேயே மூழ்கி கிடந்த அருண்மொழிக்கு இது காதிலேயே விழவில்லை. சிவானந்தம் வீட்டுக்கு வந்ததும், சாப்பாடு கேட்டதும்கூட தெரியாமல் டிவியையே ரசிச்சு பார்த்து கொண்டிருந்தார். ஏற்கெனவே போதை தலைக்கேறிய இருந்த சிவானந்தத்திற்கு இப்போது ஆத்திரமும் சேர்ந்து ஏறியது.

உடனே, வீட்டில் பாட்டிலில் கிடந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து தனது வாயில் ஊற்றி கொண்டார். சிவானந்தம் தற்கொலைக்கு முயன்றுவிட்டார் என்று தானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. வாய் நிறைய மண்ணெண்ணையை வைத்து கொண்டு, பின்னர் ஒரு தீக்குச்சியை பற்ற வைத்து அருண்மொழி முகத்திலே பொளிச்சென்று கொப்பளித்தார்.

இப்போது அருண்மொழி முகம், தலை, கழுத்து, தோள்பட்டை என தீ பிடித்து அலறினார். வலியால் கதறினார். மனைவி துடிப்பதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சிவானந்தம் பயந்துகொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

உடனே சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அருண்மொழியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். இப்போது தீவிர சிகிச்சையில் அருண்மொழி இருக்கிறார். இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com