சீரற்ற காலநிலையினால் அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க ஜனாதிபதி பணிப்பு

சீரற்ற காலநிலையினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தின் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி, இன்று (26) காலை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபேகோன் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு உடனடி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.

நிவாரண நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை நிதி அமைச்சிலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் அனர்த்தத்திற்குள்ளான மக்களை விடுவிக்கும் நடவடிக்கைகளுக்கு முப்படையினரின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ள ஜனாதிபதி, இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான நலன்பேணல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்துவருமாறும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபேகோனுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

திடீர் என ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி இன்று இரவு நாடு திரும்பவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]