சீனா: 11 மாகாணங்களில் பெருவெள்ளம் – 56 பேர் பலி

சீனாவின் பல பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, செஜியாங், அன்ஹுயி, ஜியாங்சி, ஹுபேய், ஹுனான், குவாங்டாங், சோங்கிங், சிச்சுவான், கிஸோ, யுன்னான், தன்னாட்சி உரிமை பெற்ற குவாங்சி ஸுவாங் மாகாணங்களில் பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. கடந்த மாதம் 29-ம் தேதியில் இருந்து தொடர்ந்து பெய்துவரும் மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குறிப்பாக, ஹுனான் மாகாணத்தில் உள்ள கிசியாங்ஜியாங் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. முந்தைய மழைக்காலங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு 39.51 மீட்டர் உயரத்துக்கு வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், இந்த மாகாணங்களில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள சுமார் 27 ஆயிரம் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும், 37 ஆயிரம் வீடுகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. மழை மற்றும் வெள்ளம் சார்ந்த விபத்துகளில் சிக்கி நேற்றுவரை 56 பேர் உயிரிழந்ததாக சீன அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஹுனான் மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணிகளில் சுமார் 3 ஆயிரம் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி மாயமான 22 பேரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த வெள்ளத்தால் 2500 கோடி யுவான் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட வெள்ள நிவாரணப் பணிகளுக்கு 1880 கோடி யுவான்களை அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அந்த செய்திகள் குறிப்பிட்டுள்ளன.