சி.வி.விக் னேஸ்வரன் – சம்பந்தன் விரைவில் சந்திப்பு

வடக்கு மாகாண சபை விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரனும் விரைவில் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இது தொடர்பில் இருவரும் தங்களுக்குள் மின்னஞ்சல் மூலம் கடிதப் பரிமாற்றமும் செய்துகொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண சபை விடயத்தில் ஆளும் தரப்பினர் கன்னை பிரிந்து மோதுவதைத் தவிர்த்துத் தற்காலிகமாகவேனும் சுமுகமாகச் செயற்பட இணங்கியுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

சம்பந்தனும், விக்னேஸ்வரனும் விரைவில் கொழும்பில் சந்தித்துப் பேசி விடயங்களுக்குத் தீர்வு காண்பர் என்றும், அதுவரை மோதல் போக்கைத் தவிர்த்துக்கொள்ள மாகாண சபையிலுள்ள ஆளும் கட்சியின் இரு தரப்பினரும் உடன்பட்டுள்ளனர் என்றும் இரு தரப்புகளுக்கும் இடையில் தொடர்பாளர்களாகச் செயற்படும் வட்டாரங்கள் தெரிவித்தன.

திருமதி அனந்தி சசிதரனையும், சர்வேஸ்வரனையும் தற்காலிகமாக வடக்கு மாகாண அமைச்சர்களாக தான் நியமித்திருக்கின்றமை தொடர்பாக அந்த நியமனம் நடைபெற்ற அன்றே மின்னஞ்சல் மூலம் சம்பந்தனுக்கு அறிவித்திருந்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன். தற்காலிக நியமனத்துக்கான தமது பக்கக் காரணங்களையும் முதல்வர் அக்கடிதத்தில் விளக்கியிருந்தார் எனக் கருதப்படுகின்றது.

அக்கடிதம் அனுப்பப்பட்ட சமயம் ஜேர்மனிக்கு விஜயம் செய்திருந்த சம்பந்தன் நேற்றுமுன்தினம் அக்கடிதத்துக்குப் பதில் அனுப்பிவைத்திருந்தார்.

முரண்பாடுகளின்றி நிலைமையைச் சுமுகமாகத் தீர்த்து விடயங்களை முன்னெடுப்பதற்கான சமரச நிலையை ஏற்படுத்தவேண்டும் என அந்தக் கடிதத்தில் சம்பந்தன் ஐயா குறிப்பிட்டார் என்றும், அதையே தாமும் உறுதிப்படுத்தி சம்பந்தன் ஐயாவுக்குப் பதில் கடிதம் அனுப்பிவைத்தார் என்றும், அந்தப் பதில் கடிதத்தில் மிக விரைவில் கொழும்பில் சம்பந்தன் ஐயாவைச் சந்தித்து விடயங்களைச் சுமுகமாக்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்குத் தான் பார்த்திருக்கின்றார் என்ற செய்தியைத் தாம் குறிப்பிட்டிருந்தார் என்றும் விக்னேஸ்வரன் தமக்கு நெருங்கிய தரப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாண அமைச்சர்களான பா.டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம் ஆகியோரின் செயற்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்குத் தனியான விசாரணைக்குழுவொன்றையும், முன்னாள் அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், குருகுலராஜா ஆகியோர் தொடர்பான விசாரணை அறிக்கையை மீளாய்வு செய்வதற்குப் பிறிதொரு குழுவொன்றையும் அமைப்பார் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறிவித்துள்ள சூழலில் அத்தகைய குழுவை முதல்வர் நியமிக்கின்றமை சட்ட ரீதியானது அல்ல என்பதால் அதனைத் தாங்கள் ஏற்கமாட்டார்கள் என்று அமைச்சர்களான சத்தியலிங்கமும், டெனீஸ்வரனும் பதில் அறிவிப்பு விடுத்த பின்னணியில் முதலமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு மாகாண சபையின் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படவேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் ஆளுந்தரப்பைச் சேர்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அ.பரஞ்சோதி பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்துள்ள சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாண சபையின் சபைக் கூட்டத்துக்கான நிகழ்ச்சி ஒழுங்குக் குழு நேற்றுமுன்தினம் காலை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கூடியது.

முன்னர் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கு மின்னஞ்சல் மூலம் கடிதமொன்றை அனுப்பிவைத்த முதல்வர் விக்னேஸ்வரன், தாம் அமைத்த, தாம் இனி அமைக்கவிருக்கும் விசாரணைக்குழுக்கள் சட்டபூர்வமானவை என்றும், எனவே, அத்தகைய விசாரணைக்குழுக்கள் இருக்கத்தக்கனவாக வேறு தெரிவுக்குழுவொன்றை அமைக்கத் தேவையில்லை என்றும், எனவே, அது தொடர்பாக உறுப்பினர் ஒருவர் சமர்ப்பித்த பிரேரணையைச் சபையில் எடுக்கத் தேவையில்லை என்றும் அந்தக் கடிதத்தில் கோரியிருந்தார்.
இந்த விடயத்தில் தாம் ஒரு முடிவை எடுக்கமுடியாது என்று குறிப்பிட்ட அவைத் தலைவர், அதனால் சம்பந்தப்பட்ட பிரேரணை, அதையொட்டி முதல்வர் தமக்கு அனுப்பிய கடிதம் ஆகியவற்றை உரிய தீர்மானம் எடுப்பதற்கு வசதியாக சகல உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைத்தார்.

இந்தப் பின்புலத்திலேயே வடக்கு மாகாண சபையின் நிகழ்ச்சி ஒழுங்குக்குழு நேற்றுமுன்தினம் காலை கூடியது.

முதல்வர் விக்கி சம்பந்தன் இடையே சந்திப்பும், அதன்மூலம் இணங்கிச் செயற்படக்கூடிய வாய்ப்புகளும் இருப்பதால் மேற்படி பரஞ்சோதியின் தெரிவுக்குழு தொடர்பான பிரேரணையை சபையில் இந்தத் தடவை எடுக்காமல் ஒத்திவைக்கலாம் என்றும், அதேசமயம், சம்பந்தனுடனான சந்திப்பு மற்றும் இணக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட முன்னர் முதல்வரும் தம்பாட்டில் விசாரணைக்குழுக்களை அறிவித்துவிடாமல் அமைதி பேணவேண்டும் என்ற உறுதிமொழியை முதல்வரிடமிருந்து பெற்றுக்கொள்ளுதல் அவசியம் என்றும் அக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதற்கான தொடர்பாளராகச் செயற்பட்டு இரு தரப்புகளுக்கிடையில் சுமுக நிலைமையை உறுதிப்படுத்த தீவிரமாகச் செயற்பட்டார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்றுமுன்தினம் கூடியபோதும், இதேபோன்று வடக்கு மாகாண சபையில் ஆளும் தரப்புகளுக்கிடையிலான கன்னை பிரிந்து மோதுகின்ற முயற்சிப் போக்கும் கைவிடப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே வடக்கு மாகாண சபையில் ஆளும் தரப்பிடையே தமக்கு ஆதரவு வழங்கும் 14 உறுப்பினர்களையும் அழைத்து நேற்றுமுன்தினம் மாலை முதல்வர் தனியாகக் கூட்டமொன்றை நடத்தினார். அங்கும் பிணக்கின்றி இணங்கிப்போகும் வற்புறுத்தலே பல தரப்பினாலும் முன்வைக்கப்பட்டன.

அடுத்த கூட்டத்தை ஆளும் தரப்பின் முழு அங்கத்தவர்களையும் முப்பது பேரையும் அழைத்து ஒன்றிணைக்கும் வகையில் முன்னெடுக்கவேண்டும் என்றும் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டது.

இத்தகைய ஓர் இணக்க நிலைமை நேற்றுமுன்தினம் மாலை காணப்பட்டமையால் நேற்றைய வடக்கு மாகாண சபை அமர்வில் பரஞ்சோதியின் தெரிவுக்குழு தொடர்பான பிரேரணை சபையில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]