சிவனொளிபாதமலைக்கு பெயர் மாற்றம் செய்த சம்பவத்தை புறந்தள்ளிவிட முடியாது- இந்து மத விவகார அமைச்சர் உடன் கவனத்தில் எடுக்க வேண்டும்

சிவனொளிபாதமலைக்கு பெயர் மாற்றம் செய்த சம்பவத்தை புறந்தள்ளிவிட முடியாது! இந்து மத விவகார அமைச்சர் உடன் கவனத்தில் எடுக்க வேண்டும் என்கிறது இந்து மக்கள் பேரவை

சிவனொளிபாத மலைக்கு காலாகாலமாக இருந்துவந்த சிவனொளிபாத மலை எனும் பெயரை மாற்றி புத்தரின் பாதஸ்தானமாக நிலையான பெயர்க்கல் பதித்திருக்கும் செயற்பாடுக்கு தற்போது இந்து மத விவகார அமைச்சராக புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலையிட்டு இப் பெயர்மாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்து, பழையபடி சிவனொளிபாத மலை என மாற்றியமைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இந்து மக்கள் பேரவை எனும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மட்டக்களப்பு நகர், கல்லடி, கோட்டைக்கல்லாறு போன்ற பகுதிகளில், வெள்ளிக்கிழமை23.11.2018ஆம் திகதி காலை இந்து மக்கள் பேரவை, மட்டக்களப்பு எனும் அமைப்பினால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்திலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 சிவனொளிபாதமலைக்கு

புத்தரின் பாதஸ்தானம் என பெயர் மாற்றிய செயற்பாட்டை நாம் புறந்தள்ளிவிட முடியாது, அவர்கள் செய்த இச் செயற்பாடு எப்போதும் ஒரு நிரந்தர தீர்வாக அமையாது, அது இன ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடாகும் அத்துடன் இது இந்து மக்களின் மனதை புண்படுத்தும் செயலாகவே அமைந்துள்ளது.

இப்பெயர் மாற்றம் தொடர்பில் தற்போதய இந்து விவகார அமைச்சராகவுள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலையிட்டு இரத்துச் செய்யும் செயற்பாட்டை உடன் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த பல ஆண்டுகளாக குறிப்பாக வடக்கு கிழக்கில் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேற்றியுள்ளதனை நாம் அவதானித்து வருகின்றோம்.

கடந்த 2016 க்கு முன்னர் பெயர்ப் பலகையில் காணப்பட்ட ‘அடம்ஸ்பீக்” என்ற பெயர் அழிக்கப்பட்டு ஆங்கிலத்திலும் ஸ்ரீபாத என்றே எழுதப்பட்டது. அதன் தொடர் நடவடிக்கையாக, இவ்வருடம் சிவனொளிபாதம் என்னும் பெயர் அழிக்கப்பட்டு, கௌதம புத்தரின் பாதஸ்தானம் என்றே மூன்று மொழிகளிலும் பதிக்கப்பட்ட பெயர்க்கல் அங்கு வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பேரினவாத சிந்தனையை மீண்டும் வெளிக்காட்டியுள்ளனர்.

இந்த செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிப்பதுடன், இந்து விவகார அமைச்சர் இப் பெயர்­மாற்றத்தினை காலதாமதம் செய்யாது உடனடியாக இரத்துச் செய்து பழையபடி சிவனொளிபாத மலை என்று தமி­ழிலும் குறிப்பிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]