சிறுவர் வன்முறையைத் தடுக்க ஒரு லட்சம் விரல் அடையாளம் பெறும் திட்டம்!!

18 நாட்கள் திட்டத்தின் கீழ் சிறுவர் வன்முறையைத் தடுக்கும் நோக்கில் ஒரு லட்சம் பேரின் விரல் அடையாளங்களைச் சேகரித்து ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கும் செயற்பாடு இன்று மட்டக்களப்பு சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் இளைஞர் சமூகத்தின் ஏற்பாட்டில் ஆரம்பமானது.

இன்றைய தினம் புதன்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரிடம் முதல் விரல் அடையாளம் பெறப்பட்டது.

சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் இளைஞர் சமூகத்தினருடன் இணைந்து மட்டக்களப்பு இளைஞர் சமூகமும் இணைந்து செயற்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இச் செயற்திட்டத்தின் போது, விழிப்புணர்வு நாடகவும் காண்பிக்கப்பட்டது. அத்துடன் வவுணதீவு பிரதேச செயலகம், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகம் ஆகியவற்றிலும் இன்றைய தினம் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிறுவர் வன்முறைகள் தடுக்கப்படவேண்டும், வன்முறையில் ஈடுபடுவோருக்கு உடனடியாக தண்டனை, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு ஜுன் மாதம் 4ஆம் திகதி பெறப்படும் விரல் அடையாளங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் இந்த விரல் அடையாளம் பெறல் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், நாடு பூராகவும் இச் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் இளைஞர் சமூகத்தினர் தெரிவித்தனர்.

வவுணதீவு அபிவிருத்தி அமைப்பினால் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் இளைஞர் சமூகம் உருவாக்கப்பட்டதாகும்.

இந்த ஆரம்ப நிகழ்வில், மாவட்ட செலயத்தின் திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், வவுணதீவு அபிவிருத்தி அமைப்பின் பிரதம அதிகாரி எல்.ஆர்.டிலிமா, திட்ட முகாமையாளர் தவராசா மலாதி, திட்ட அதிகாரிகளான கே.சதீஸ்குமார், அன்ரன் ஜெகன், ராஜரத்தினம், வவுணதீவு பிரதேச இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறுவர் வன்முறையைத் தடுக்கும் நோக்கில் ஒரு லட்சம் பேரின் விரல் அடையாளங்களைச் சேகரித்து ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கும் இந்தச் செயற்பாட்டில் அனைத்து மக்களையும் பங்கெடுக்குமாறு சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் இளைஞர் சமூகம் மற்றும் மட்டக்களப்பு இளைஞர் சமூகத்தினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]