சிறுமி றெஜினா படுகொலை- முக்கிய தடயங்கள் கிராம இளைஞர்களினால் கண்டுபிடிப்பு

சுண்டுக்குழி பாடசாலை மாணவி சிறுமி றெஜினாவின் படுகொலை விவகாரம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், வடக்கு கிழக்கில் பல்வேறு தொடர் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

06 வயது சிறுமி கழுத்து நெறிக்கப்பட்டு, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், றெஜினாவின் உள்ளாடையான பெனியன், தலைமுடிக்கு போடும் கிளிப் மற்றும் பூல்பான்ட் என்பன பற்றைக்குள் இருந்து நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன.

ரெறீனாவின் வீட்டில் இருந்து சுமார் 600 மீற்றர் தூரத்தில் இருந்து இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிராம இளைஞர்கள் நேற்று காலை 10.30 மணி தொடக்கம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையிலேயே, குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட பொருட்களை பெற்றோர் அடையாளம் காட்டியுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து பொலிஸார் மோப்ப நாயுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், சிறுமியின் பாடசாலைச் சீருடை, டை, சப்பாத்து என்பன மீட்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த 25 ஆம் திகதி மாலை கிணறு ஒன்றில் இருந்து சிறுமி றெஜினாவின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆறு பேரை கைதுசெய்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் மிகக் கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கிற்கான தீர்ப்பு முடிவடைந்த நிலையில், 06 வயது சிறுமியான ரெஜினா படுகொலை செய்யப்பட்டமை தமிழ் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அண்மைய காலங்களில் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கொலை கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகங்கள், வாள்வெட்டுக் கலாசாரம் அதிகரித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் பொலிஸார், இராணுவம், விஷேட அதிரடிப் படையினர் அதிகளவிலானவர்கள் குவிக்கப்பட்டுள்ள போதிலும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

யுத்தம் முடிந்து கடந்த 09 வருடங்கள் கடந்துள்ள போதிலும், வடக்கு மக்களுக்கு இதுவரை நிரந்தர தீர்வு கிடைக்காத நிலையில், நாளுக்கு நாள் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை காணப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]